Published : 02 Nov 2023 02:32 PM
Last Updated : 02 Nov 2023 02:32 PM

ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்ததால் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களில் கையெழுத்திட மறுக்கும் தமிழக ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அறிவித்தது.

அதன்படி, இன்று காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் நான்குவழிச் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ரா.விஜய ராஜன், எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதுரை புறநகர் - மாநகர் பகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சிக் கொடிகளுடனும், கருப்புக் கொடிகளுடனும் காலை 7.30 மணிக்கே திரண்டனர். மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். காலை 9 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கருப்புப் பலூன்களை வானில் பறக்கவிட்டதை போலீஸார் உடைத்தனர். மாதர் சங்க பெண்கள் கருப்பு உடை அணிந்தும் வந்திருந்தனர். கருப்புக் கொடி காட்டியதால் தடுக்க முயன்ற போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து நாகமலை புதுக்கோட்டை என். ஜி.ஓ காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x