Published : 18 Jul 2014 10:45 AM
Last Updated : 18 Jul 2014 10:45 AM

சட்டப்பேரவை முதல்வர் துதி பாடும் மன்றம் அல்ல: ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல் காக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெயருக்கு சில அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவதும், முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடுவதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது.

தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும்.

ஆனால், 2011 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா நேற்று முன்நாள் வரை மொத்தம் 115 முறை இந்த விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் பல தருணங்களில் ஒரே நாளில் 5 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

நடப்புக் கூட்டத்தொடரில் கூட கடந்த 10ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் கழித்து 15 ஆம் தேதி அத்துறை தொடர்பான 8 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் 10 ஆம் தேதி முடிந்த நிலையில், அத்துறை குறித்த இரு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் கடந்த 14 ஆம் தேதி முதலமைச்சர் வெளியிட்டார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில் வேட்டி கட்டி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக பேரவையில் கடந்த திங்கட்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு அன்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்க முடியும். ஆனால், அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்காமல், அந்த பிரச்சினை குறித்தும் நேற்று முன்நாள் முதலமைச்சரே 110 விதியின் கீழ் பதிலளித்துள்ளார்.

110 விதியை பயன்படுத்துவது முதலமைச்சரின் உரிமை என்ற போதிலும், எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அந்த விதியை மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

அ.தி.மு.க.வின் அனைத்தும் ஜெயலலிதா தான் என்றால் அதை உட்கட்சி விவகாரம் என்று ஒதுக்கித் தள்ளி விடலாம். ஆனால், ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகள் அவையில் அனைத்துமே முதலமைச்சர் தான்; அமைச்சர்கள் அனைவரும் பொம்மைகள் என்பது போல நடந்து கொள்வதும், குறைகளை சுட்டிக்காட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரை ஓடுகாலிகள் என்று அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அவையிலிருந்து வெளியேற்றுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல், பெருமையையும், மதிப்பையும் பாதுகாக்கும் வகையிலும், அவையின் விதிகள் மற்றும் மரபுகளை மதித்தும் செயல்பட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x