

காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மேலும் "தமிழக ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பதற்கான காரணம் என்ன? ஏன் வழங்கவில்லை என்று ஆளுநர் விளக்கத் தயாரா? எதுக்காக இதையெல்லாம் செய்கிறார்" என்று கேள்வி அமைச்சர் எழுப்பியுள்ளார்.
இதனிடையே சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்ட பரிந்துரை நிராகரித்த தமிழக ஆளுநருக்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் பங்கேற்கவுள்ள காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
‘5 மாநிலத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும்’ - ஸ்டாலின்: "விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான், நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறன்றனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு: அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக் காட்டுகிறது. இந்தச் செயல் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததையே காட்டுகிறது என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில், உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு: 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ.1,898-ல் இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்துள்ளது.
ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி வைப்பு நிதி: ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
“வங்கி மூலம் நிதி வருவதை தேர்தல் பத்திர திட்டம் உறுதி செய்கிறது”: "தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது அல்ல; அவை கட்சிகளுக்கான நிதியை வங்கிகள் வாயிலாக சுத்தமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன், மூன்று வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்”:மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மகாராஷ்டிராவில் போராட்டம் வலுத்து வருவது கவனிக்கத்தக்கது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லி ஓய்வு: உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் அவரது பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்க்காததை அடுத்து ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காசா மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் உடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.