Published : 31 Oct 2023 06:10 PM
Last Updated : 31 Oct 2023 06:10 PM

தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியிட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூலே காரணம் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் வடிகால் பாதைகள் மற்றும் நிர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக் மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா, காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனசரகர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், தமிழக காவல் துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x