Published : 29 Jan 2018 10:58 AM
Last Updated : 29 Jan 2018 10:58 AM

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும்: ஸ்டாலின் எச்சரிக்கை

பேருந்து கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்பப் பெறாவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்கக்கோரி, சென்னை கொளத்தூரில், இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கைதுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என திமுக இன்று தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. எங்கள் போராட்டத்துக்கு தோழமை கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தப் போராட்டம் இன்றுடன் முடியப் போவதில்லை. பேருந்து கட்டண உயர்வை அரசு நேற்று சிறிதளவு குறைத்திருப்பது கபட நாடகம். கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெறாவிட்டால் அடுத்தக்கட போராட்டம் இதைவிட தீவிரமாக இருக்கும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எட்டப்படும்.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராடிய அரசியல் கட்சியினர், மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என இப்போராட்டம் வாயிலாக வலியுறுத்துகிறோம்" எனக் கூறினார்.

'ஆளுங்கட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன'

கைது செய்யப்பட்ட பின்னர் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பேருந்து கட்டண உயர்வு மக்கள் மீதான பேரடி. அதன் காரணமாகவே இன்று தோழமைக் கட்சிகள் இணைந்து பேருந்து கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஆளும்கட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அது அவர்களுக்கும் தெரியும். அதன் காரணமாகவே கிடைத்தவரை சுருட்டுகின்றனர்" என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x