Last Updated : 18 Jan, 2018 03:22 PM

 

Published : 18 Jan 2018 03:22 PM
Last Updated : 18 Jan 2018 03:22 PM

அரசாணை பிறப்பிக்காமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறதா?- உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் நடப்பாண்டில் அரசாணை பிறப்பிக்காமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் பிப். 25-ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ராஜாவும், திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கே.ஜேசுமணி என்பவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பாரதிதாசன் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செ.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலேமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட 354 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி 2017-ம் ஆண்டில் ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை பிராணிகள் நல வாரியத்தின் விதிமுறைகள் பின்பற்றி வெளியிடப்பட்டது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த முடியும். அந்த அரசாணையில் மனுதாரர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ள ஸ்ரீவைகுண்டம், திண்டுக்கல் உலகம்பட்டி கிராமங்களின் பெயர் இடம் பெறவில்லை என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 2017-ம் ஆண்டில் 16 அரசாணைகள் வெளியிடப்பட்டது. அரசாணையில் குறிப்பிடாத ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அரசு தாக்கல் செய்துள்ள ஜல்லிக்கட்டு அரசாணை 2017-ம் ஆண்டிற்குரியது. நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசு அரசாணை வெளியிடவில்லை. அரசாணை இல்லாததால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியும். அரசாணை இல்லாமல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகள் சட்டவிரோதம் என்றும் அறிவிக்கலாம் என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதிடுகையில், 2018-ல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணை குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x