Published : 21 Jan 2018 07:42 AM
Last Updated : 21 Jan 2018 07:42 AM

சிங்கப்பூரில் நடத்துநர் இல்லாமல் இயங்கும் பேருந்து: ஈசி லிங்க் நிறுவனம் மூலம் ஏடிஎம் அட்டை வடிவில் பேருந்து அட்டைகள்

சிங்கப்பூரில் நவீன தொழில்நுட்பத்தில் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு, நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு பிறகே இந்தியாவுக்கு வந்தடைகின்றன. சிங்கப்பூரில் ஈசி லிங்க் எனும் நிறுவனம் மூலமாக ஏடிஎம் அட்டை வடிவில் பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் உள்ள டாப்-அப் இயந்திரங்களில் பணத்தை செலுத்தி அட்டையில் சேமித்துக்கொள்ளலாம்.

பேருந்தில் ஏறும்போது அங்கு இருக்கும் கருவியில் இந்த பேருந்து அட்டையை காண்பிக்க வேண்டும். அது நாம் ஏறிய இடத்தை குறித்துக்கொள்ளும். பின்னர் நாம் இறங்கும்போது மீண்டும் அந்த அட்டையை கருவி முன்பு காட்ட வேண்டும். அப்போது நாம் பயணித்த தூரத்துக்கான கட்டணம் நமது பேருந்து அட்டையில் இருந்து கழிக்கப்படும்.

தன்னிச்சையாக பணம் ரீசார்ஜ்

ஒருவேளை நாம் அட்டையை கருவி முன்பு காட்டாமல் இறங்கினால், அப்பேருந்து கடைசியாக நிற்கும் இடம் வரையிலான கட்டணம் நமது அட்டையில் இருந்து கழிக்கப்படும். இந்த அட்டையை நமது கடன் அட்டையுடன் இணைத்துக்கொண்டால், பேருந்து அட்டையில் பணம் தீர்ந்தவுடன், தன்னிச்சையாக பணம் ரீசார்ஜ் ஆகிவிடும். இந்த அட்டையைக் கொண்டு மெட்ரோ ரயிலிலும் பயணிக்கலாம். கடையில் பொருட்கள் வாங்கவும், உணவகங்களில் பணம் செலுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு 5 கிமீ தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 2 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டிருந்தால், 3 கிமீ ரயிலிலும், 2 கிமீ பேருந்திலும் செல்கிறோம் என்றால் குறைந்தபட்ச கட்டணம்தான் வசூலிக்கப்படும். ஒவ்வொன்றும் தனித்தனி குறைந்தபட்ட கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த வசதி சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x