Published : 29 Oct 2023 02:48 PM
Last Updated : 29 Oct 2023 02:48 PM

கேரள குண்டுவெடிப்பு | எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவு

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து

சென்னை: கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் தமிழகத்தில் ஊடுருவலாம் என்ற அடிப்படையில், கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கக்கூடிய, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என்ற நோக்கில், கேரள மாநிலத்தை ஒட்டிய எல்லையோர தமிழக பகுதிகளில் காவல்துறை சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளிகள் தமிழகத்துக்குள் புகாத வண்ணம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x