

பசும்பொன்னில் 2 மண்டபங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 12 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மற்றொரு மண்டபமும் கட்டப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறைக்கு 16,895 பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 13-ம் தேதி முதல் 15 ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வெங்கயம் பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’: வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“இந்திய கம்யூ. அலுவலகம் மீதான தாக்குதல் பின்னணியை கண்டறிக’: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலின் பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, தியாகராயர் நகர், செவாலியே சிவாஜி கணேசன் சாலை இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தாமஸ் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தியுள்ளது.
தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் தீவிரம்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சூழலில், நேற்றிரவு நடந்த இடைவிடாத தாக்குதல் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காசா முழுவதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
“ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும்”: "மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம். தற்போது மத்தியில் உள்ள அரசு எதை செய்ய மறுக்கிறதோ நாங்கள் அதனை செய்வோம்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நவ.2-ல் விசாரணைக்கு மஹுவா ஆஜராக உத்தரவு: கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது. முன்னதாக தனது தொகுதியில் நவ.4ம் தேதி வரை முன்திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக 5-ம் தேதி வரை மஹுவா அவகாசம் கேட்டிருந்தார். இந்த கோரிக்கையை நெறிமுறைக் குழு நிராகரித்துள்ளது.
தொடர்ந்து உயரும் வெங்காய விலை: தாக்காளி விலையுயர்வு வாட்டி வதைத்து ஓய்ந்த நிலையில் தற்போது வெங்காய விலை உயர்வு மக்களுக்கு பெரும் சிரமமாக வந்து சேர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை காலையில் மொத்த விற்பனையில் 5 கிலோ வெங்காயம் ரூ.350-க்கு விற்பனையானது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. தீர்மானத்துக்கு ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.
120 நாடுகளின் ஆதரவுடன் ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பதாக அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் தெரிவித்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டு - இந்தியா சாதனை: 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா 72 பதக்கங்களை வென்றிருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.