Published : 28 Oct 2023 11:32 AM
Last Updated : 28 Oct 2023 11:32 AM
சென்னை: வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.200-ஐ தாண்டியதைப் போன்று வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.150-ஐ தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்விலிருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.
வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்கு தாழ்வதற்கும் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT