

டெல் அவிவ்: போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, பபுவா நியூ கினியா, பராகுவே உள்பட 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
120 நாடுகளின் ஆதரவுடன் ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பதாக அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் நிறுத்தம் கோரி ஐநா பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. நாஜிக்கள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்களோ அவ்வாறே ஹமாஸ் பயங்கரவாதிகளும் அழிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தீர்மானத்தின் மீது பேசிய இஸ்ரேலுக்கான ஐநா நிரந்தரப் பிரதிநதி கிலாட் எர்டன், "உண்மையின் அடிப்படையில் இந்த தீர்மானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இஸ்ரேல் சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு. தனது குடிமக்களை பாதுகாக்கப் போராடும் இஸ்ரேலை ஆதரிப்பதைவிட, சட்டத்தை மதிக்காத பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதாக பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன என்பது இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையைத் தடுக்க விரும்பும் எவரும் பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் தீர்மானங்களுக்கு வாக்களிக்கக் கூடாது. உண்மையாக அமைதி திரும்ப வேண்டும் என விரும்பினால், ஆயுதங்களைக் கீழே போடவும், பிணையக் கைதிகளை உடனடியாக விடுவிக்கவும் ஹமாசை வலியுறுத்த வேண்டும். இது நடந்தால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்த நாள் ஐ.நா.வுக்கும், மக்களுக்கும் ஒரு இருண்ட நாள்.
தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் தொடர்ந்து போராடும். தனது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும் யூதர்களுக்கு உரிமை உண்டு. ஐநா பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் ஹமாஸ் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஹமாசின் அராஜகம் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் சக்தியை அழித்தொழிப்பதே இதற்கு ஒரே வழி. அப்பாவி மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகளின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கடமை இந்த அவைக்கு இருக்கிறது. அவர்களின் பெயரை மறைப்பது சரியல்ல.
கொலைகாரர்களை பாதுகாக்க ஏன் நினைக்கிறீர்கள்? குழந்தைகளின் தலையை வெட்டி எரிந்த, அவர்களைக் கடத்திச் சென்ற பயங்கரவாதிகளை ஏன் பாதுகாக்கிறீர்கள்? இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்த தீர்மானம் என்ன சொல்கிறது என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இது தீர்வுக்கு வழிகாண்கிறதா அல்லது இஸ்ரேலின் கைகளைக் கட்டிப் போட நினைக்கிறதா? வாய்ப்பு வழங்கப்பட்டால் ஹமாஸும் ஹிஸ்புல்லாவும் ஒரு அக்டோபர் 7ஐ மீண்டும் மீண்டும் நடத்துவார்கள். ஹமாஸின் வேர்களை வெட்டி எரிவதே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு" என தெரிவித்தார்.