Last Updated : 28 Oct, 2023 02:59 PM

 

Published : 28 Oct 2023 02:59 PM
Last Updated : 28 Oct 2023 02:59 PM

குழப்பத்துக்கு தீர்வு - ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலக பெயர் பலகை அமைப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘ஏ’ பிளாக்கின் தரை தளத்தில் துறை சார்ந்த அலுவலக விவர பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து துறைகள் எங்கு உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் துறை சார்ந்த அலுவலக விவர பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பாரதிநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பேரிடர் மேலாண்மை, மாவட்ட தொடக்க மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், கருவூலம், தோட்டக்கலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினசரி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக துறை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க பொதுமக்கள் வருகின்றனர். தரைதளத்துடன் கூடிய 4 அடுக்குமாடி கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஏ முதல் எப்- பிளாக் வரை உள்ளது. இதில், பல மாதங்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே எந்த அலுவலகங்கள் எங்கு உள்ளன என்பது குறித்து இன்றளவும் குழப்பம் நீடித்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘ஏ’ பிளாக்கின் தரை தளத்தில் துறை சார்ந்த
அலுவலக விவர பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு துறைகளுக்கும் எவ் வழியாக செல்ல வேண்டுமென முறையான தகவல் மற்றும் வழிகாட்டி பலகை வைக்கப்படாமல் இருப்பது தான் காரணம். ஆட்சியர் கட்டிடத்தில் அலுவலகங்கள் எங்கு உள்ளது என பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் தகவல் பலகை வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திலும் மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் எந்தெந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பது குறித்து ஏ-பிளாக்கின் தரை தளத்தின் நுழைவு வாயிலில் துறை சார்ந்த அலுவலக விவர பெயர் பலகை வைத்துள்ளனர். இதுபோன்ற அலுவலகங்கள் விவரம் குறித்து எப்-பிளாக்கிலும் அமைத்தால் மக்களுக்கு இன்னும் பயன் உள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x