Published : 28 Oct 2023 05:12 AM
Last Updated : 28 Oct 2023 05:12 AM

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அளித்தது மிகைப்படுத்தப்பட்ட புகார்: டிஜிபி, காவல் ஆணையர் விளக்கம்

பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்த டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண். உடன் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா. படம்: ம.பிரபு

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் வீடியோ காட்சிகளை வெளியிட்டு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன் உள்ள இரும்பு தடுப்பு வேலி முன்பு கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார், என்பதை விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கருக்கா வினோத் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதில் போலீஸாரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு பதிவு வெளியிடப்பட்டது. இதைதமிழக தலைமை டிஜிபி சங்கர் ஜிவால் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகசென்னை வேப்பேரியில் உள்ளகாவல் ஆணையர் அலுவலகத்தில்டிஜிபி சங்கர் ஜிவால், சென்னைகாவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல்டிஜிபி அருண் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பெட்ரோல் குண்டுகளை வீசும் வீடியோபதிவுகளை காண்பித்து விளக்கம் அளித்தனர்.

இந்த வீடியோ பதிவில், ‘கருக்கா வினோத் தனது இல்லம் அமைந்துள்ள நந்தனம் பகுதியில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரை தனியாக நடந்து வரும் சிசிடிவி பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அவர், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச முயன்ற புகைப்பட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவரை பிடிப்பதற்கு போலீஸார் செல்லும் செல்போனில் எடுக்கப்பட்ட ‘வீடியோ’ காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

பின்னர், காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கூறியதாவது:

குற்றவாளி கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர், தேனாம்பேட்டையில்இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகையை நோக்கி தன்னந்தனியாக நடந்து வந்திருப்பது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலில் நுழைய முயற்சிக்கவில்லை. பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்த 4 பாட்டில்களில் 2 பாட்டில்களை சர்தார் படேல் சாலையின் எதிர்புறத்தில் இருந்து (ஆடைக்குள் மறைத்து வைத்து) வீச முற்பட்டபோது, அவை ஆளுநர் மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த ‘பேரிகார்டு’ (இரும்பு தடுப்பு வேலி) மீது விழுந்தன. ஆளுநர் மாளிகையின் உள்ளே வீசப்படவில்லை.

குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்கவில்லை. அவர் ஆளுநர் மாளிகை ஊழியர்களால் பிடிக்கப்படவில்லை. சென்னை போலீஸார் 5 பேரால் பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்து கருக்கா வினோத் ஜாமீனில் வெளியே வந்த சமயத்தில் சிறையில் இருந்து 93 பேர் வெளியே வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 3 பேரும், மற்றவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வெளியே வரும்போது இப்படிஒன்றாக வந்துள்ளனர். மற்ற புகைப்படத்தில் அவர்கள் அனைவரும் தள்ளி தள்ளி வருகின்றனர்.எனவே,இந்த சம்பவத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். இந்த விசாரணையில் தான் அவர், ஆளுநர் மாளிகை மீது எதற்காக பெட்ரோல் குண்டு வீச வந்தார் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் மாளிகைக்கு நாம் (போலீஸார்) கட்டளையிட முடியாது. நாங்கள் நடத்திய விசாரணை, வழக்கு பதிவு விவரங்களை சொல்ல முடியும். இந்தவிவகாரத்தில் போலீஸ்காரர்தான் புகார் கொடுத்துள்ளார். ஆதாரத்துடன் குற்றவாளி பிடிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை சொன்னபுகார்படி சம்பவம் நடக்கவில்லை. இது மிகைப்படுத்தப்பட்ட புகார்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி முதலில் வரும் புகார் மீதுதான் வழக்கு பதிவு செய்ய முடியும். ஆளுநர் மாளிகையில் இருந்து இரவு 9.30 மணிக்குதான் புகார் வருகிறது. விசாரணையில் எந்தவித சுணக்கமும் இருக்காது என்று உறுதி அளிக்கிறோம். ஆளுநருக்கான பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித குளறுபடியும் கிடையாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதை மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x