Published : 27 Oct 2023 04:52 PM
Last Updated : 27 Oct 2023 04:52 PM

‘கருக்கா’ வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை மனு

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளை காவல் துறை வெளியிட்டது | படம்: ம.பிரபு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு புதன்கிழமை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா' வினோத்தை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ரவுடி கருக்கா வினோத், ஆளுநர் மாளிகைக்கு வந்தது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் குண்டு வீசிய வினோத் தனியாகதான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை. ரவுடி ‘கருக்கா’ வினோத்துக்கு அரசியல் தொடர்பு உள்ளதா என்பதை இப்போது கூற முடியாது. காவலில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் அதுகுறித்து தெரியவரும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், ரவுடி ‘கருக்கா’ வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி காவல் துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், கருக்கா வினோத்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத்தை போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது. இந்த மனு குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x