Published : 27 Oct 2023 01:48 PM
Last Updated : 27 Oct 2023 01:48 PM

17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610, பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேர் உள்ளனர், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார் .

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதவாது: "தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்களை வழங்குவார்கள்.

இன்றிலிருந்து டிசம்பர் 9ம் தேதி வரை, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். அதில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம். முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610, பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேர் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் பொதுவான நோக்கம் என்னவென்றால், புதிய வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரைச் சேர்க்க படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி மாற்றங்கள் இருந்தால், படிவம் 8-ன் மூலம் விரும்பிய இடத்துக்கு மாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 17 வயது இருப்பவர்கள்கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.ஆனால், ஜன.1, 2024, அன்று 18 வயது நிரம்பியவராக இருப்பின், இப்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, 2024, ஜன.5ம் தேதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். அதாவது, 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஏப்.1, ஜூலை 1, அக்.1 இதில் எந்த காலாண்டில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைகிறதோ, அப்போது அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x