Published : 27 Oct 2023 01:42 PM
Last Updated : 27 Oct 2023 01:42 PM

திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தருமபுரி: ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் 'நீட்' தேர்வை ஒழிக்க முடியாது என தருமபுரியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

கட்சி நிகழ்ச்சி மற்றும் கட்சி பிரமுகர்கள் இல்லத் திருமண நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று (அக். - 27) தருமபுரி வந்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழக வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் இதற்கு சான்று. குறிப்பாக, இந்திய குடியரசு தலைவர் தமிழகம் வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு குளறுபடிகளை இது உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் வெடி குண்டு கலாச்சாரம், ரவுடியிசம் தலை தூக்குகிறது. திராவிடம் பொய் என்பது தவறு. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் சேர்ந்தது தான் திராவிடம். 'நீட்' தேர்வு இந்தியா முழுக்க அமலில் உள்ளது.

50 லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் இந்த தேர்வை ஒழிக்க முடியாது. அரசியல் ஆதாயத்துக்காக திமுக மாணவர்களை குழப்புகிறது. நீட் போன்ற எந்த தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வர். நீட்டை எதிர்க்கிறேன் என்ற பெயரில் திமுக, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை குழப்பி வருகிறார்.

எனவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். எந்த பலனும் தராத சனாதனம், சாதிவாரி கணக்கெடுப்பு, மதம் ஆகியவற்றை பற்றி பேசுவதால் மக்களுக்கு பயனில்லை. அரசுகள் செய்யும் தவறுகளை மக்கள் கவனிக்கக் கூடாது என்பதற்கான திசை திருப்பபும் வேலைகள் இவை.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் இயல்பானது. தேமுதிக-வின் வாக்கு வங்கி மீண்டும் உயர்ந்து கட்சி எழுச்சி பெறும். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு 20% போனஸை அறிவித்துள்ளது. 30 அல்லது 40 சதவீதம் போனஸ் கோரிய போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பால் நிறைவு இல்லை. மேலும், போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

வரும் ஜனவரியில் மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் எண்ணிக்கை பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதே போல விஜய பிரபாகரனுக்கு என் பொறுப்பு என்பதை பொதுக் குழு கூடி முடிவு செய்யும்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியின் போது, மாநில நிர்வாகி மருத்துவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x