Published : 27 Oct 2023 04:56 AM
Last Updated : 27 Oct 2023 04:56 AM

போக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. போனஸ்கணக்கீட்டுக்கான மாதாந்திர உச்ச வரம்பும் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-23-ம்ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையானது லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம்கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்கமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள்: அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம்10 சதவீத போனஸ் வழங்கப்படும்.

‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்கள்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால், போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல்அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ்பெறுவார்கள். மொத்தத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு ரூ.402 கோடியே 97 லட்சம்போனஸ் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்கள்: மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான போனஸ் தொடர்பான உத்தரவுகள் தனியாக பிறப்பிக்கப்படும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x