Published : 26 Oct 2023 05:30 AM
Last Updated : 26 Oct 2023 05:30 AM

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல்46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனை அரசு தொடர்ந்துபாதுகாத்து வருகிறது. முந்தையஅரசு விட்டுச்சென்ற கடும் நிதிநெருக்கடி, கடன் சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்தவாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு முனைப்புடன்செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதே, உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, தற்போது42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.2,546 கோடி கூடுதல் செலவு: இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் நலன் கருதி, இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரிக்கு பதிலாக, ஏப்ரலில் அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அப்போது, பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை நேரில் சந்தித்து, மத்திய அரசு அறிவித்த உடனேயே தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு.. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 18-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.

எவ்வளவு கிடைக்கும்? இதன்மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம்என்ற விகிதத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.600 முதல் அதிகபட்சம்ரூ.9,000 வரையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.360 முதல் ரூ.5,000 வரையும் உயர்வு இருக்கும்.

இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு அறிவித்ததற்காக, முதல்வருக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார்: அகவிலைப்படி உயர்வு என்பது 16 லட்சம் பேருக்கு பலனளிக்கும் அறிவிப்பாகும். அதேபோல, நிலுவையில் உள்ள சரண் விடுப்பு சலுகை, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றி தரவேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன்: நிலுவை தொகையுடன் அகவிலைப்படி உயர்வை பெறஉள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர், உள்ளாட்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு நன்றிதெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x