Published : 18 Jan 2018 09:19 AM
Last Updated : 18 Jan 2018 09:19 AM

தடைபட்ட உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - மாநிலத் தேர்தல் ஆணையருடன் சிறப்பு நேர்காணல்

தடைபட்டுப் போன உள்ளாட்சித் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாக மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

உள்ளாட்சி வார்டு சீரமைப்புப் பணி எப்போது முடிவடையும்?

வார்டு சீரமைப்பு தொடர்பான ஆட்சேபணைகளைத் தெரிவிக்க ஏற்கெனவே ஜன.12-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வரும் ஜன.23-ம் தேதியில் இருந்து எங்களது மேற்பார்வையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் மண்டலக் கூட்டங்கள் நடத்தப்படும். அதிலும் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம். அதில் எவை ஏற்கப்பட்டன? எவற்றை ஏற்க முடியவில்லை என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அலசி ஆராயப்படும். அந்த பரிசீலனைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து பிப்.15-ம் தேதியை ஒட்டி தமிழக அரசுக்கு எங்களது பரிந்துரைகளை அனுப்பி வைப்போம்.

அதுபோல அவர்களும் வார்டு சீரமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்து எங்களது ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பர். நாங்கள் ஒப்புதல் அளித்தபிறகு இதில் அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும். வார்டு சீரமைப்பு, இடஒதுக்கீடு இவை முழுமையாக முடிந்தபிறகுதான் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக முடியும். இது ஒன்றும் ஒன்மேன் ஷோ அல்ல. டீம் ஒர்க்.

இந்தப் பணி முடிந்து விட்டால் எப்போது தேர்தல் நடத்தப்படும்?

எந்தத் தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்பதை இப்போது நான் அறுதியிட்டுக் கூற முடியாது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் தேர்தலுக்கும் எங்களைத் தயார்படுத்தி வருகிறோம்.

தற்போது 12,524 கிராம ஊராட்சி, 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட ஊராட்சி என கிராமப்புறங்களில் 12,943 தலைவர் பதவிகளுக்கும், 1,06,450 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுபோல நகர்ப்புறங்களில் 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி என மொத்தம் 664 தலைவர் பதவிகளுக்கும், 12,820 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் மேயர், தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக இருமடங்கு தேவைப்படுகிறது. அதையும் கேட்டுப்பெற வேண்டும். அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டால் 2 அல்லது 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிடும். அதுபோல இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜன.10-ம் தேதி வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலையும், எங்களது வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.

மேலும் இந்த வாக்காளர் பட்டியல், வார்டு சீரமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்குப் பிறகும் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. இப்பணிக்கு கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும். தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என இந்த 2 விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

வார்டு சீரமைப்பில் பல்வேறு குளறுபடிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள னரே?

இதுதொடர்பாக அரசாணை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போது இருந்த வார்டுகள் தான் தற்போதும் உள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. திமுக தரப்பில் சென்னை மாநகராட்சியில் உள்ள சில குறைகள் சுட்டிகாட்டப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் ஜன.18-ம் தேதி அன்று வார்டு சீரமைப்பு தொடர்பான வரைவை வெளியிடவுள்ளனர். அதற்குப்பிறகுதான் அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆராய முடியும்.

வார்டு சீரமைப்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எந்த ரோலோ, அதிகாரமோ இல்லை எனக் கூறப்படுகிறதே?

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், பஞ்சாயத்து, பேரூராட்சி உதவி இயக்குநர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும்தான் வார்டு சீரமைப்புக்கான அதிகாரிகள் என அரசாணை விதிகளிலேயே மிகத்தெளிவாக உள்ளது. அதன்படிதான் அவர்களை வார்டு சீரமைப்புக்கான அதிகாரிகளாக நியமித்துள்ளோம். குற்றம் சாட்டுபவர்கள் இந்த விதிகளை சரியாக கவனிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்துள்ளதால் இப்போதைக்கு தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதே?

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதற்காக அந்த அமைப்புகளை அப்படியே விட்டுவிட முடியாதே. அதற்கு ஒரு கேர்-டேக்கர் வேண்டும். மக்களின் அன்றாடத் தேவைகளை, பிரச்சினைகளை பூர்த்தி செய்வதற்காகத்தான் தனி அலுவலர்களை நியமித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றால் அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கப் போகிறோம். இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘தேர்தல் தேதி’ அறிவிப்பு வெளியிட்ட தேதியில் இருந்து தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?

மற்ற தேர்தல்களைப் போல உள்ளாட்சித் தேர்தலை ஒரே வீச்சில் நடத்தி முடித்துவிட முடியாது. வேட்புமனு தாக்கல், பரிசீலனை என இருகட்டங்களாக நேரடித் தேர்தலை நடத்திய பிறகு, மற்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும். இந்த எல்லா நடைமுறைகளையும் முடித்து மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்க குறைந்தபட்சம், அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 50 முதல் 60 நாட்களாகும்.

ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் இல்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறதே?

அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே தனிஒரு அமைப்பாக இருந்து நடத்திவிட முடியாது. மாநில அரசை கலந்து ஆலோசித்து அவர்களின் ஒப்புதலோடுதான் தேர்தலை நடத்தமுடியும். இதுதான் சட்டத்திலும் உள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டு சீரமைப்பும், இடஒதுக்கீடு பணியும் நடந்து வருகின்றன. இதில் ஒரு முடிவுக்கு வராமல் எப்படி தேர்தலை நடத்த முடியும். இதில் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கே இடமில்லை.

அவரவர் பணியை அவரவர் செய்து வருகிறோம். 2016-ல் இருந்து சட்டப்பூர்வமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால்தான் தேர்தல் தள்ளிப்போனது. மற்றபடி இந்த விஷயத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் நடுநிலைமை தவறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக முதல்வரும் அறிவித்துள்ளார். இதில் நாங்கள் ஒன்றும் புதிதாக எந்த சிக்கலையும் ஏற்படுத்த வில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x