Published : 23 Oct 2023 06:29 PM
Last Updated : 23 Oct 2023 06:29 PM

ராபர்ட் கால்டுவெல்லை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவான பேச்சு: ஆளுநருக்கு காங். கண்டனம்

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை (இடது), ஆளுநர் ஆர். என்.ரவி (வலது)

சென்னை: "பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பப்பட்டார்கள்' என்று தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் இன்று (அக்.23) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் 'பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பப்பட்டார்கள்' என்று தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெடுல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்துக்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்துக்கு உணர்த்தியவர்.

சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழியால் இயங்க முடியும் என்றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகம் குறித்தும் வெளியிட்டவர். சமஸ்கிருதத்தின் முகமுடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும்.

தமிழக சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய மசோதாக்கள், தமிழக அரசின் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றாமல், ஆளுநருக்கு உரிய எந்தவொரு வேலையும் பார்க்காமல், கிடைக்கும் மேடைகளில் அரசியல்வாதி போல பேசுகிறார் தமிழக ஆளுநர். தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் யார் நல்லது செய்கிறார்களோ அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு பேசும் தமிழகத்தின் ஆளுநருக்கு மீண்டும் ஒருமுறை எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x