

மேல்மருவத்தூர்: மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைந்தார். அவருக்கு வயது 82. அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த சிலநாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வியாழக்கிழமை காலை உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்காரு அடிகளார் மாலை 5 மணி அளவில் மறைந்தார்.
செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதரும் செவ்வாடை அணிந்த பக்தர்கள், அவருக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெளியூர் பக்தர்கள் பலரும் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர். மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் அஞ்சலி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, த.மோ.அன்பரசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக எம்எல்ஏ மல்லை சத்யா, பண்ருட்டி ராமச்சந்திரன்,சசிகலா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.