Published : 20 Oct 2023 11:52 AM
Last Updated : 20 Oct 2023 11:52 AM

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நிறைவேற்றிக் காட்டியவர் பங்காரு அடிகளார்” - அமைச்சர் பொன்முடி புகழஞ்சலி

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் பொன்முடி

மேல்மருவத்தூர்: "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி கூறியதை எல்லாம் நிறைவேற்றிக் காட்டியவர் பங்காரு அடிகளார்" என்று அமைச்சர் பொன்முடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் (82) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, த.மோ.அன்பரசன் ஆகியோரும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியது: "இந்து மதத்திலே ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர்தான் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி எல்லோருக்கு பொது என்ற நிலையை உருவாக்கி, அக்காலத்தில் இருந்தே, அனைத்து சாதியினரும் இங்கு வருவதற்கு வாய்ப்பு அளித்தவர் அவர் ஒருவர்தான்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி கூறியதை எல்லாம் நிறைவேற்றிக் காட்டியவர் பங்காரு அடிகளார். அவர் செய்த சாதனைகள் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்று. அந்தக் காலத்திலேயே பெண்களை கருவறைக்குள் அனுமதித்து, அவர்களே அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்தவர். அவரது சாதனைகள் எண்ணிலடங்காதது. மதம், கட்சி, சாதி, என வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உணர்வோடு பாடுபட்டவர். நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார்.

அவரது பிள்ளைகள், பங்காரு அடிகளாரின் கருத்துகளை எடுத்துச் சென்று பரப்ப எப்போதும் தயாராக இருப்பவர்கள். அனைத்து தரப்பினரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இங்கே மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், அதில் இலவசமாக மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அவரது மறைவு அனைவருக்குமே பெரிய இழப்பு” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x