Published : 20 Oct 2023 10:46 AM
Last Updated : 20 Oct 2023 10:46 AM

”சமய சீர்திருத்தத்தில் தனி முத்திரை பதித்தவர்” - பங்காரு அடிகளாருக்கு கி.வீரமணி புகழஞ்சலி

பங்காரு அடிகளார் (இடது), கி.வீரமணி (வலது)

சென்னை: பங்காரு அடிகளார் மறைவுக்கு திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரைப் பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் என்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப்பினை, அவருடைய சிந்தனைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் (வயது 82) இயற்கை எய்தினார் (19.10.2023) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும்கூட, அதில் அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும்.

தமிழிலேயே பூசை முறை, அதிலும் பெண்களே அதை நடத்தலாம் என்பது இந்து சனாதனத்துக்கு உடன்பாடில்லாத ஒன்று என்று அறிந்து ‘தன் வழி தனி வழி’ என்று ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவர். வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர் என்ற முறையில், சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரைப் பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர், மனிதநேயர்.

அவரது மறைவால் வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், அவரது பக்தர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் திராவிடர் கழகம் சார்பில் மனிதாபிமானத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x