Published : 25 Jan 2018 06:54 PM
Last Updated : 25 Jan 2018 06:54 PM

பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் குண்டர்களை வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு: ஸ்டாலின் கண்டனம்

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு என்கிற போர்வையில் பள்ளிக் குழந்தைகள் வாகனம் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு இதை கண்டும் காணாமல் இருப்பதா என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்னி சேனா அமைப்பினர் நேற்று அரியானாவில் பள்ளி வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பஸ்சில் இருந்த 2ம் வகுப்பு குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை பீதியில் கூச்சலிட்டவாறு கதறி அழுதனர்.

இந்த விவகாரம் நாடெங்கும் பலத்த எதிர்ப்பலையை கிளப்பி உள்ளது. படத்துக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் கர்னி சேனா அமைப்பினர் நடத்திய தாக்குதலை அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களும் கண்டித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“போராட்டக்காரர்கள் என்ற போலியான போர்வையில் பள்ளிக் குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க அரசு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இதுபோன்ற செயல்களை கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு வன்முறையாளர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x