Published : 03 Jan 2018 09:26 PM
Last Updated : 03 Jan 2018 09:26 PM

ஆன்மிக அரசியலை வைத்து திராவிட அரசியலை அழிக்க முடியாது: ஸ்டாலின் பேட்டி

ஆன்மிக அரசியலை வைத்து திராவிட அரசியலை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் தோல்வி அடைவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோபாலபுரம்  இல்லத்துக்கு இன்று இரவு 8 மணி அளவில்வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

''ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் என்னோடு தொடர்பு கொண்டு அதற்கான நேர அனுமதியைக் கேட்டார். ஏற்கெனவே நான்கைந்து மாதத்திற்கு முன்னால் அவர் சந்தித்துள்ளார்.

ஆகவே இந்த சந்திப்பில் ஆச்சரியம் இல்லை. புதிய ஒரு செய்தி அல்ல. அவர் கருணாநிதியையும், எனது தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசத்திற்கு ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் பண்பாட்டு அடிப்படையில் கருணாநிதி அவரை வாழ்த்தி இருக்கலாம். அவர் மட்டுமல்ல விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ரஜினி ஆசி மட்டும் கேட்டாரா? திமுகவின் ஆதரவையும் கேட்டாரா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ''அதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு பண்ண வேண்டிய விஷயம். ஆதரவை கேட்கிறாரா? கேட்கவில்லையா? அதை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டிய விஷயம்.

அவர் ஆன்மிக அரசியலைத்தான் நடத்தப் போகிறேன் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு சித்திரத்தை, உருவகத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு எல்லாம் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இந்த மண் திராவிட இயக்க மண், தமிழ்நாட்டின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டிருக்கக் கூடிய மண் அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யார் எல்லாம் முயற்சித்துள்ளார்கள் அவர்கள் தோற்ற கதைகள் நாட்டிற்கு நன்றாக தெரியும்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x