Published : 04 Jan 2018 01:35 PM
Last Updated : 04 Jan 2018 01:35 PM

கோவையில் கோயில் யானைகள் நலவாழ்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை கோவையில் தொடங்கியது.

கோவை, மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகாமில் உள்ள 33 யானைகள்

நடப்பாண்டுக்கான முகாம் இன்று (ஜன. 4) முதல் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 26 கோயில்கள், 5 மடங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 2 கோயில்களைச் சேர்ந்த 33 யானைகள் இந்த முகாமில் கலந்துகொண்டுள்ளன.

யானைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் அதன் எடை உள்ளதா எனக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு முகாம் நாட்களில் அவற்றின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ மருத்துவக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டு யானைகள் புகாமல் தடுக்க ஏற்பாடு

கோயில் யானைகள் நலவாழ்வு முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்துவிடாமல் தடுக்க கம்பி வேலி, சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், பழங்கள், மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக யானைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 150 கிலோ வரை கரும்பு, வெல்லம் உள்ளிட்ட சத்துணவுகள் அளிக்கப்படுகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல இருமுறையும் ஷவர் மூலம் யானைகள் குளிப்பாட்டப்படுகின்றன.

ரூ.1.5 கோடி ஒதுக்கீடு

பிப்ரவரி 20 வரை நடைபெற உள்ள இந்த முகாமுக்காக தமிழக அரசு சுமார் ரூ.1.5 கோடி தொகையை ஒதுக்கியுள்ளது.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x