Published : 17 Oct 2023 04:55 AM
Last Updated : 17 Oct 2023 04:55 AM

ராக்கெட் திட்டங்களுக்கு உதவும் முதல்வருக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். சந்திப்பின்போது, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கூறியதாவது:

முதல்வரை சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி. சந்திரயான் -3 திட்ட விஞ்ஞானிகளை அவர் அழைத்து கவுரவப்படுத்தியதற்கு இஸ்ரோ சார்பில் நன்றி தெரிவித்தேன். அவருக்கு நான் சந்திரயான்-3 மாதிரி வடிவத்தை பரிசாக வழங்கினேன்.

தமிழகத்தில் நாங்கள் செயல்படுத்திவரும் விண்வெளி திட்டங்களுக்கு அவர் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகம் தொழில் மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற்பிரிவு உற்பத்தி ஆகியவற்றில் முன்னேறி வருகிறது. தமிழகத்தின் தொழில்வழித் தடங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் தற் போது அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

எங்களின் இரண்டாவது ஏவுதள வளாகத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைத்து வருகிறோம். ஏற்கெனவே இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவளித்து வருகிறது. தற்போது நில எடுப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு அனுமதிகளுக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு, போக்குவரத்து இணைப்பு, மின்சாரம், கட்டுமான நடவடிக்கைகளுக்கான தேவை உள்ளது. இவற்றின் மூலம் 2 ஆண்டுகளில் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தை கட்டி முடிக்க முடியும். எனவே, அனுமதி மற்றும் உதவிகளை முதல்வரிடம் கேட்டுள்ளேன்.

தொழிற்பூங்காக்கள்: ஏற்கெனவே, குலசேகரன்பட்டினம் புதிய ஏவுதள வளாகத்தை சுற்றிலும் தொழிற்பூங்காக்களை தமிழக அரசு அமைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது,விண்வெளி தொழில்கள் அதிகளவில் தமிழகத்தில் வருவதற்கு உதவியாக இருக்கும். மேலும், இது இஸ்ரோவின் பயணத்துக்கும் வளர்ச் சிக்கும் உதவியாக இருக்கும்.

தமிழக அரசின் பல்வேறு சாதனைகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் நிறைய பதக்கங்களை குவித்துள்ளனர். தமிழக வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில், ராக்கெட் ஒருங்கிணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ராக்கெட்களுக்கு தேவையான பாகங்கள், திரவ எரிபொருள் இன்ஜின்கள் சோதனை உள்ளிட்ட பல்வேறு பொறியியல் தொடர்பான பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து ஹரிகோட்டா கொண்டு செல்லப்படும் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படுகிறது. இதுகுறித்து நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவரும் அறிந்துவைத்துள்ளார். இந்த திட்டங்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

குலசேகரன்பட்டினம் ஏவுதளம் இந்த காலகட்டத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

ஏற்கெனவே ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் 50 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்கள் இலங்கை தீவைசுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது ராக்கெட்டின் அழுத்தம் குறைகிறது. இதனால், சிறிய ராக்கெட்களை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறப்பாக இருக்கும். அதே நேரம் கன்னியாகுமரியில் அவ்வளவு நிலம் இல்லை. அதாவது 2 ஆயிரம் ஏக்கர் நிலம் இல்லை. எனவே அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில், குலசேகரன்பட்டினத்தில் அந்த அளவு இடம் கிடைத்தது. நில எடுப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில், அங்கு ஏவுதளம் அமைக்கப்பட்டு, சிறிய ராக்கெட்களை ஏவ முடியும்.

வணிகரீதியான, தனியார் செயற் கைக்கோள்கள் ஏவுவதற்கான நடவடிக்கை குறித்து?

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வணிகரீதியான,தனியாருக்கான செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. 72செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. தனியாரான ஸ்கைரூட் நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. அதேபோல் ஐஐடியின் இன்குபேஷன் சென்டரில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட் விரைவில் ஏவப்பட உள்ளது. அடுத்ததாக, சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் பணி எந்த அளவில் உள்ளது?

சந்திரயான் -3 தற்போது ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு அடுத்த பணிகள் நடைபெறும். ராக்கெட் ஏவுவதைவிட, அங்கிருந்து கிடைக்கும் மாதிரிகளை எடுத்துவர இயந்திரங்களை அனுப்ப வேண்டும். ரோபோட்டை அனுப்பினால் அங்கிருந்து பூமிக்கு திரும்பிவரவேண்டும். அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதுடன், பெரிய ராக்கெட்டையும் வடிவமைக்க வேண்டும். தற்போது அனுப்பும் ராக்கெட்களில் மனிதனை அனுப்ப முடியாது. 4.5 டன் எடையுள்ள ராக்கெட்தான் தற்போது அனுப்பப்படுகிறது. மனிதனை அனுப்ப 12 முதல் 15 டன் எடையுள்ள ராக்கெட் வேண்டியுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் இதற்கான பணிகள் நடைபெற்றால், மனிதனைஅனுப்ப முடியும்.

மாணவர்களுக்கு இஸ்ரோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன திட்டம் உள்ளது?

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உன்னதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் 10 ஆயிரம் பேர் ராக்கெட் ஏவப்படுவதை பார்க்க வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x