Published : 17 Oct 2023 05:45 AM
Last Updated : 17 Oct 2023 05:45 AM

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில்மீன்பிடித்துக் கொண்டிருந்த சர்புதீன், லிட்டன், மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரிய வாஷிங்டன் ஆகியோருக்குச் சொந்தமான 3விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கைகடற்படையினர் கடந்த சனிக்கிழமை இரவு சிறைப்பிடித்தனர். 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று, தலைமன்னார் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த கென்னடி, பாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளையும், அதில் இருந்த 15 பேரையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் நாளை (அக்.18) பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவப் பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் கோபு தலைமையில் நேற்று மாலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இதில் டி.எஸ்.பி உமாதேவி, மீன்வளத் துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிடுவது எனவும், வேலை நிறுத்தத்தை தொடர்வது எனவும் மீனவர்கள் அறிவித்தனர். நேற்று வேலை நிறுத்தத்தால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழமற்றபகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தலைமன்னார் அருகே சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக்.26-ம்தேதி வரை வவுனியா சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x