

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர். இலங்கையில் இருந்து நாகைக்கு வர ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.
‘மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’: மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் இருந்து 28 தமிழர்கள் உள்பட மேலும் 235 பேர் வருகை: ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக சனிக்கிழமை 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28 பேர் தமிழர்கள். முன்னதாக வெள்ளிக்கிழமை 212 பேர் இஸ்ரேலில் இருந்து அழைத்துவரப்பட்டனர்.
இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் 724 குழந்தைகள் உள்பட 2,215 பேர் பலி: ஹமாஸ் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது. இதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள், 458 பெண்கள் உள்பட 2,215 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
‘காசா நகரை விட்டு வெளியேறச் சொல்வது ஆபத்து’: நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள ஐநா பொதுச் செயலாளர், "காசா நகரில் வசிக்கும் பொதுமக்கள் 24 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேறி தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அபாயகரமானது; மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது" என்று தெரிவித்துள்ளார்.
“வெறும் ஆரம்பம் தான்; இனி நடப்பதைப் பாருங்கள்”: இஸ்ரேல் - ஹமாஸ் போர் சனிக்கிழமை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சேர்த்து 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், "காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
‘வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தளபதி உயிரிழப்பு’: “ஹமாஸ் அமைப்பின் விமானப் படைத் தலைமையகத்தை குறி வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரவு நேர வான்வழித் தாக்குதலில் இந்த தலைமையகம் அழித்தொழிக்கப்பட்டது. இதில், ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலை வழி நடத்தியவர் இவர்” என்று இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.
‘போரில் இணையத் தயாராக இருக்கிறோம்’: இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவாக சேர முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, சவுதி அரேபியா வலியுறுத்தல்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ‘பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனிடம் சவுதி அரேபிய இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்தை ஆன்டனி பிளிங்கனும் ஆமோதித்துள்ளார்
‘லியோ’ படம் குறித்து சீமான் கேள்வி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "‘லியோ’படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தான். இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை? திரையரங்குகளுக்கு காவலர்கள் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லாத வேலை. இதேபோல ஏன் ‘ஜெயிலர்’ படத்துக்கு செய்யவில்லை? திமுக அரசு விஜய்யை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.