“விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?” - சீமான் சந்தேகம்

“விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?” - சீமான் சந்தேகம்
Updated on
1 min read

சென்னை: “இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ”‘லியோ’ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தான். இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கவில்லை? திரையரங்குகளுக்கு காவலர்கள் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லாத வேலை. இதேபோல ஏன் ‘ஜெயிலர்’ படத்துக்கு செய்யவில்லை?

திமுக அரசு விஜய்யை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்குக் கூட இவ்வளவு நெருக்கடி இல்லை. அதுதான் சந்தேகத்தை தருகிறது. சினிமா வியாபாரம் பெருகிவிட்ட நிலையில், சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். ஆனால், அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் எங்களுடைய ஆட்சி வரும்போது அதை நாங்கள் சீரமைப்போம்” என்று சீமான் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகும் இப்படத்தை திரையிடும் போது, பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை திரையரங்க உரிமையாளர்களுக்கு தமிழக அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in