சென்னை அருகே என்கவுன்ட்டர் முதல் ஹமாஸ் எச்சரிக்கை Vs இஸ்ரேல் நிபந்தனை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.12, 2023

சென்னை அருகே என்கவுன்ட்டர் முதல் ஹமாஸ் எச்சரிக்கை Vs இஸ்ரேல் நிபந்தனை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.12, 2023

Published on

தமிழகத்தில் நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காவிரியில் 16,000 கனஅடி நீர் திறக்க வலியுறுத்தப்படும்’: "தமிழகத்துக்கு காவிரியில் அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வெள்ளிக்கிழை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை இரண்டு வெவ்வேறு இடங்களில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவங்களில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் மற்றும் ரவுடி சதீஷ் என்று இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

குற்றவாளிகளான முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று என்கவுன்ட்டர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி:தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நவம்பர் 8-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மாற்றம்: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலரான ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிஹாரில் ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி: பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே புதன்கிழமை இரவு 09.35 மணி அளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த ரயில் விபத்தை அடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே, வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் விபத்து தொடர்பான தகவல்களை அவருக்குத் தெரிவித்தனர்.

இந்தியர்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்குகிறோம். சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான முயற்சி இது” என தெரிவித்துள்ளார்.

‘சமாதி நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்’:பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், மோடி துதிபாடிகளை ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை நிராகரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள்.

இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றை வழங்குவோம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, “இஸ்ரேல் மக்கள் 150 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளோம். எச்சரிக்கை விடுக்காமல், காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசுகிறது. இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும், இஸ்ரேல் பிணைக் கைதி ஒருவரை கொல்வோம்” என்று ஹமாஸ் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஹமாஸ் உடனான சண்டை தொடரும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன தீவிரவாதிகள் அனைவரும் உயிரற்ற மனிதர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான், சவுதி தலைவர்கள் ஆலோசனை: ஹமாஸ் - இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம், "பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்" என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in