''தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமாதி நிலைக்கு தள்ளப்படுகிறது'' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை நிராகரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. அந்தச் சட்டம் குறைந்தபட்சம் 2014-ம் ஆண்டு வரை ஒரு மாற்றமாக இருந்தது. அதன் பிறகு மோடி அரசு அந்தச் சட்டத்தினை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போகச்செய்யவும், மோடி துதிபாடிகளை அதன் ஆணையர்களாக நியமித்து கோரிக்கைகளை நிராகரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

தகவல் அறியும் சட்டத்தின் சில வெளிப்பாடுகள் பிரதமர் மோடிக்கு சங்கடமாக இருந்தது அதன் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்தது. இந்த திருத்தத்தின் சில விஷயங்களை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். தகவல் அறியும் உரிமை சட்டம் விரைவாக சமாதிநிலைக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் அந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த 2019, ஜூலை 25-ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கிய திருத்ததங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் தலையிட்டு பேசியது இதோ" என்று கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு, அக்.12ம் தேதி அமலுக்கு வந்தது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் படி, அரசாங்கம் தொடர்பான குடிமக்களின் கேட்கும் கேள்விகளுக்கு உரிய காலத்துக்குள் பதில் அறிக்கவேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in