Published : 12 Oct 2023 04:47 AM
Last Updated : 12 Oct 2023 04:47 AM

காவிரி பிரச்சினையில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

தஞ்சாவூர் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர், திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர்.

தஞ்சாவூர்/ திருவாரூர் நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றன.

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அளவில் பங்கேற்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, திருவிடைமருதூர், திருபுவனம், திருப்பனந்தாள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தன.

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காந்திஜி சாலை வழியாக எல்ஐசி அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து, எல்ஐசி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மேயர் சண்.ராமநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் மற்றும் திமுக கூட்டணிகட்சியினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் 15 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற மறியல், முற்றுகைபோராட்டத்தில் பங்கேற்ற 1,259 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கி, அஞ்சல் நிலையம் வரை பேரணி நடந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் சங்கர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

திருவாரூர், மன்னார்குடி, விளமல், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி உட்பட மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூரில் நடைபெற்ற அஞ்சல் நிலைய முற்றுகை போராட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நாகை கடைவீதி, வேளாங்கண்ணி, பரவை காய்கறி சந்தை, வேதாரண்யம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டன.

நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக மாவட்டச் செயலாளர் என்.கவுதமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாட்கோ தலைவர் உ.மதிவாணன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திரையரங்குகளில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏஎஸ்.ராஜகுமார் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே 500 பேர், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே 300 பேர், அரியலூர் மாவட்டம் திருமானூரில் 37 பேர் கைதாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x