பேரவையில் காரசார வாதம் முதல் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் காசா வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.10, 2023

பேரவையில் காரசார வாதம் முதல் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் காசா வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.10, 2023
Updated on
3 min read

95,000 சிறு வணிகர்களின் வரி நிலுவைத் தொகை தள்ளுபடி: "சமாதான திட்டத்தின கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்" என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம்:தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதனிடையே, முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள். ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை: சட்டப் பேரவையில் காரசார விவாதம்: மகளிர் உரிமைத் தொகை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை குறித்து இதுதொடர்பாக பலமுறை பேசியிருக்கிறேன். விளக்கமாக கூறி இருக்கிறேன். ஒரு கோடி பேருக்கு குறையாமல் கொடுப்போம் என்றுதான் ஆரம்பத்தில் கூறினேன். இப்போது ஒரு கோடியே 6 லட்சத்தையும் தாண்டிவிட்டது. இன்னும் சொல்கிறேன். மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற அறிவிப்பை அரசின் சார்பில் வெளியிட்டுள்ளோம். தற்போது மேல்முறையீடும் செய்து வருகின்றனர். 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையைத் தாண்டினாலும், அதையும் அரசு பரிசீலிக்கும். மேல்முறையீடு செய்யும் உண்மையான மனுதாரர்களுக்கு நிச்சயம் கொடுக்கப்படும்" என்றார்.

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது: பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை: "இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு 84 தமிழர்கள் இருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அங்குள்ள சூழ்நிலை மற்றும் ஒன்றிய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது”: காங்கிரஸ் கட்சியும், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார்.

‘இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு’ - பிரதமர் மோடி: ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

1,500 ஹமாஸ் இயக்கத்தினரின் உடல்கள் கண்டெடுப்பு: இஸ்ரேல்: எல்லைகளில் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், காசா சுற்றுப் பகுதிகளில் ஹமாஸ் இயக்கத்தினரின் 1,500 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 200 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

“அவர்கள் தொடங்கினார்கள், நாங்கள் முடித்துவைப்போம்” - இஸ்ரேல்: “போரை நாங்கள் தொடங்கவில்லை ஆனாலும் நாங்கள் அதை முடித்து வைப்போம்” என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. போரை நாங்கள் விரும்பவில்லை. மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டுதனமான முறையில் அது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எங்களைத் தாக்கியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஹமாஸ் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரியவைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறதா இஸ்ரேல்?: இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த குண்டுகள் மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய், குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1000 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டு மக்கள் சுமார் 750 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in