

சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில், எம்எல்ஏ ஜவாஹிருல்லா (மமக), சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ், சமாதான திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள் என்று அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ ஜவாஹிருல்லா, தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது: "சிறை தண்டனை என்பது சீர்திருத்தத்துக்காக கொடுக்கப்படக்கூடிய தண்டனை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவு, தண்டனைப் பெற்ற சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கான வழிவகையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நான் இந்த சட்டப்பேரவையில் 2011-2016 வரை உறுப்பினராக இருந்தபோதும், அதன்பிறகு 2021ம் ஆண்டு முதல் இந்த சட்டமன்றத்திலும், தொடர்ச்சியாக தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனைப் பெற்றிருக்கக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை 161வது விதியின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களது அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இந்த நீண்டகால சிறைவாசிகள் விடுதலை கோரி அல்லது விடுப்புக் கோரி மனுதாக்கல் செய்யும்போது தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர்கள், 49 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பிவிட்டார். ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்ற ஒரு வாதத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வைத்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை, தமிழக முதல்வர் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 35 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கால் நூற்றாண்டு காலம் சிறைகளில் இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேருக்கு தமிழக முதல்வர் விதி எண் 161-ன் கீழ் பரிந்துரை செய்தார்? அனைவரும் விடுதலை செய்யப்பட்டால், மகிழ்ச்சி, இல்லாதபட்சத்தில் எஞ்சியவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.
ஆளுநரிடம் இந்த கோப்புகள் சென்றிருக்கிறது. அவர் எப்போது கையெழுத்திடுவார் என்பது யாருக்கும் தெரியாத புதிர். காரணம், இதே சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகள் இன்னும் ஆளுநர் மாளிகையில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் இந்த 35 சிறைவாசிகளுக்கும் நீண்டநாள் விடுப்பு பரோல் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "1998ம் ஆண்டு பிப்.14 அன்று, கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையும், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். மொத்தம் 36 இஸ்லாமியர்கள், 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் 15.11.2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன்விடுதலையாவது தடைபட்டது என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர். எங்களிடம் இவர்கள் கோரிக்கை வைத்தபோது, இவர்களில் சிலர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சிறைவாசிகள், சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களின் வயதுமூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்றார்.