Published : 10 Oct 2023 12:58 PM
Last Updated : 10 Oct 2023 12:58 PM

''காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது'' - பாஜகவின் பண்டி சஞ்சய் குற்றச்சாட்டு

பண்டி சஞ்சய் | கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியும், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. யுபிஏ ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்ததில் ஆச்சரியம் இல்லை. காங்கிரஸும், ஓவைசியும் எப்போதுமே பிஎஃப்ஐ, ஹமாஸ் பயங்கரவாதிகள், ரோகிங்யாக்கள் பக்கம் தான். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இந்தியா ராம ராஜ்யமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அவரைப் போலவே, கர்நாடக முன்னள் முதல்வர் பசவராஜ் பொம்மை காங்கிரஸை கடுமையாக தாக்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை காங்கிரஸ் கட்சி மறைக்கப் பார்க்கிறது. இது பாலஸ்தீனத்தில் உள்ள பயங்கரவாதிகளை ஆதரிப்பது போல் உள்ளது" என்றார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பண்டி சஞ்சய் குமார், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பண்டி சஞ்சய் சதியை ஒப்புக்கொண்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் பெயர் சேர்க்கப்பட்டது. வர இருக்கும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று அம்மாநில பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் கேசிஆர் விரும்புவதாகவும், காங்கிரஸின் 30 வேட்பாளருக்கு கேசிஆர் நிதியுதவி செய்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பண்டி தெரிவித்திருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ‘பாலஸ்தீன மக்களின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான நியாயமான கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது. இந்தப் போர் உலக மக்களிடையே பெரும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாலிஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் சனிக்கிழமை இஸ்ரேலின் தெற்கு பகுதியில் முன்னறிவிப்பில்லாத தாக்குதலை நடத்தியது. ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 1,600 பேர் கொல்லப்பட்டனர். 1,900 அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x