

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமானஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒருசில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், மற்ற இடங்களில் 3-வது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது. 3 நாட்களாக, ஷிப்ட் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாநகரில் ஜெகத்ரட்சகனின் உறவினரான பாலசுப்பிரமணியம் மற்றும் குப்புசாமி ஆகியோர் இணைந்துநடத்தி வரும் கட்டுமான நிறுவனத்திலும், பாலசுப்பிரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தங்கும் விடுதியை நிர்வகித்து வரும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த அருண்குமாரின் பெற்றோர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கோவை, ஈரோடு, பாலக்காடு பகுதிகளில் இருந்து 2 கார்களில் வந்த 5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், சில பைகளில், லேப்டாப் உட்பட சிலமுக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். அதேபோல், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நல்லப்பா நகரில் உள்ள அருண்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.பின்னர், சி. அர்த்தநாரிபாளையத்தில் உள்ள அருண்குமாரின் உறவினர் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் அடையாறு கஸ்தூரிபா நகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அங்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, ஆய்வு செய்து, அது தொடர்பாக, ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் ஜெகத்ரட்சகனின் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம்விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா, வெளிநாடுகளில் முதலீடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, அமைச்சர் செந்தில்பாலாஜி, வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவரை புழல் சிறையில்அடைத்துள்ளனர். அதேபோல், அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஒருபுறம் வருமான வரி சோதனையும், மறுபுறம் அமலாக்கத்துறை விசாரணையும் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், இந்த சோதனை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே, 2020-ல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனைநடத்தி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரதுசொத்துகளை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.