Published : 09 Oct 2023 02:58 PM
Last Updated : 09 Oct 2023 02:58 PM

மேய்க்கால் நிலம் இல்லாததால் நகர்ப்புற மாடுகளுக்கு மானிய விலையில் தீவனம்: அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட பல்வேறு நகரங்களில் நகரமயமாக்கத்தின் விளைவாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் இல்லாததாலும், தீவனங்களின் விலை உயர்வாலும் மாடுகள் சாலைகளில் விடப்படுகின்றன. இதனால் குப்பையில் கிடக்கும் உணவுகளை உண்டு சுகாதாரமற்ற முறையில் வளர்கின்றன. எனவே நகர்ப்புறங்களில் வளரும் மாடுகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாடுகள் பொதுவாக பால் கறந்த உடன் அதிகமாக உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவை. புல், செடி, கொடிகளை விரும்பி உண்பவை. இவற்றுக்கு உலர் தீவனங்களும் உணவாக வழங்கப்படுகின்றன. கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் மேய்க்கால் நிலங்களுக்குச் சென்று செடிகள், புற்கள் போன்ற பசுந் தீவனங்களை உண்ணும். ஆனால் நகர்ப் புறங்களில் மேய்க்கால் நிலங்கள் இருப்பதில்லை. இதனால் இந்த மாடுகளுக்கு பெரும்பாலும் உலர் தீவனங்களே வழங்கப்படுகின்றன.

இந்த தீவனங்களின் விலையேற்றத்தால் மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பலர் மாடுகளை கட்டாமல் சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர். இந்த மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்து குப்பையில் கிடக்கும் அழுகிய பழங்கள், காய்கறிகள், வீணாகக் கொட்டப்படும் உணவுகள் ஆகியவற்றை உண்கின்றன.

மேலும் பல மாடுகள் இவற்றுடன் சேர்த்து குப்பையில் கிடக்கும் பாலித்தீன் பைகளையும் விழுங்கிவிடுகின்றன. இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் வளரும் மாடுகள் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அந்த மாடுகள் கொடுக்கும் பால் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

மேய்க்கால் நிலம் இல்லாத நகர்ப்புற பகுதிகளில் மாடு வளர்ப்பவர்களுக்கு தீவனங்கள் என்பது பெரும் சுமையாக மாறிவருகிறது. அவர்களுக்கு மானிய விலையில் தீவனங்களை வழங்கினால்தான், மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்க அவர்களால் முடியும். இதனால் மாடுகள் சுகாதாரமற்ற முறையில் வளர்வது தடுக்கப்படும். மேலும் மாடுகள் இப்படி சாலையில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகளும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பெத்துராஜ்

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெத்துராஜ் கூறும்போது, ‘நகர்ப்புறங்களில் மாடு வளர்ப்போர் அதிகம் உள்ளனர். வளர்ந்துவிட்ட நகர்ப்புறங்களில் மேய்க்கால் நிலங்களை உருவாக்குவது சாத்தியமில்லை. மேய்க்கால் நிலங்கள் இல்லாமல்போனது மாடு வளர்ப்போர் குற்றமல்ல.

பலருக்கு மாடு வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அவர்களுக்கு தீவனங்கள் நியாய விலைக் கடையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடைத் துறை மூலம் மாடுகளை பாதுகாப்பாக கட்டி வைக்க கொட்டகை அமைப்பதற்கும் மானியம் வழங்க வேண்டும்.

மேலும், குப்பையில் இருக்கும் உணவுகளை மாடுகள் சாப்பிடும்போது அங்கு நாய்களும் சாப்பிடுகின்றன. அப்போது பல நேரங்களில் நாய்கள் மாடுகளை கடித்துவிடுகின்றன. இது மாடு வளர்ப்போருக்கு தெரியவில்லை என்றால், மாடுகள் சில நேரங்களில் நாய்களைப்போன்று வெறிபிடித்ததுபோல் நடந்து கொள்கின்றன. சாலையில் திரிந்து பலரையும் துரத்துகின்றன. இவ்வாறு சாலையில் சுற்றித் திரியும்போது விபத்துகளும் ஏற்படுகின்றன’ என்றார்.

இதுகுறித்து கால்நடைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘நகர்ப்புறங்களில் மாடுகள் வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்குவதற்கோ அல்லது கொட்டகை கட்ட மானியம் தருவதற்கோ அரசுத் திட்டங்கள் எதுவும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை அரசுதான் அறிவிக்க வேண்டும். மேய்க்கால் நிலங்கள் இல்லாதாது மாடு வளர்ப்போருக்கு சிரமம்தான்.

அதற்காக மாடுகளை சாலையில் சுற்றித் திரிய அனுமதிக்க முடியாது. மாநகராட்சி மூலம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால் ரூ.5 ஆயிரம் வரை கூட அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x