Published : 08 Oct 2023 06:37 AM
Last Updated : 08 Oct 2023 06:37 AM

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் ரூ.11,239 கோடியில் 234 பேரவைத் தொகுதிகளில் 788 பணிகள்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கும் உயர்நிலை குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 2023-24-ம் ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி 110 விதியின் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி எழுதிய கடிதத்தில், அவர்களது தொகுதிகளில்நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச்செயலாக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து1,896 பணிகள் அரசுக்கு பரிந்துரைசெய்யப்பட்டன. பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்துதுறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள் என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு கடந்த செப்டம்பர் 8-ம் தேதி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலான பணிகளை தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. 2024-25-ம் ஆண்டில் 203 பணிகள் ரூ.5,901 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் கே.கோபால், நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x