Last Updated : 07 Oct, 2023 06:23 AM

Published : 07 Oct 2023 06:23 AM
Last Updated : 07 Oct 2023 06:23 AM

தமிழக அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் பிரச்சாரம்: மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் அளிக்க பாஜக திட்டம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே சொத்துகள் நிறைந்த அதிக கோயில்கள் தென் மாநிலங்களில் உள்ளன. இவற்றில் தமிழக அரசு மட்டுமே கோயில்களையும் அவற்றின் சொத்துகளையும் நேரடியாக நிர்வகிக்கிறது. பிற மாநிலங்களில் அறக்கட்டளை அல்லது கோயில் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக அரசுகள் நிர்வகிக்கின்றன. அது போல் முஸ்லிம், கிறிஸ்தவ மதச் சொத்துகளை தமிழக அரசு பராமரிக்கிறது. மசூதி, மதரஸா மற்றும் தர்காக்களின் சொத்துகளை வக்ஃபு வாரியங்கள் மூலமாகவே தமிழக அரசு நிர்வகிக்கிறது.

வடமாநிலங்களில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் போன்ற அனைத்துமே அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கோயில் வருமானத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்தது. இந்த வகையில் சமயபுரம் கோயிலின் ரூ.420 கோடி வைப்புத் தொகையில் சுமார் 92 சதவீதம் எடுக்கப்பட்டு, பெருநகர வளர்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததால் இந்த நிதி திரும்ப செலுத்தப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் பழைய நகைகளும் உருக்கப்பட்டன. இதுபோல் பழனி உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் சொத்துகளிலும் திமுக அரசு தலையிடுவதாக பாஜக புகார் கூறி வருகிறது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை பாஜக உருவாகியது. இதன் முதல் தலைவரான எம்.நாச்சியப்பன், தொடர்ந்து தமிழக கோயில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறை நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பான புகார்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அவ்வப்போது செல்கின்றன. இதன் தாக்கமாக, தமிழக அரசிடமிருந்து கோயில்களையும் அதன் சொத்துகளையும் மீட்பதை பாஜக மக்களவை தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக எடுக்க திட்டமிட்டுள்ளது.

தெலங்கானாவுக்கு 2 தினங்களுக்கு முன் சென்ற பிரதமர் மோடி அங்கு பேசும்போது, “தமிழக அரசு கோயில் சொத்துகளை கைப்பற்றிக் கொண்டது. கோயில்களில் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதுபோல் சிறுபான்மையினரின் புனிதத் தலங்களில் செய்வீர்களா? சிறுபான்மையினரின் மத சொத்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இதன் நிதியை பொதுமக்கள் நல னுக்காக பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். இதை திமுக அரசு பின்பற்றுவது சர்ச்சையாகி உள்ளது.

பிரதமரின் புகாரை மறுத்ததுடன் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.2,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை மீட்டதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். எனினும் தமிழக கோயில்களின் நிலைமை, கோயில் சொத்துகளின் தற்போதைய நிலை போன்ற பிரச்சினைகளை மக்களவைத் தேர்தலில் பிரதானமாக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x