டெல்டா விவசாயிகள் வேதனை முதல் அண்ணாமலை Vs இபிஎஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.6, 2023

டெல்டா விவசாயிகள் வேதனை முதல் அண்ணாமலை Vs இபிஎஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.6, 2023
Updated on
2 min read

“யானைப் பசிக்கு சோளப் பொரி போல!” - விவசாயிகள் வேதனை: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு முதல்வர் அறிவித்த இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாகவும், யானைப்பசிக்கு சோளப் பொரி போல உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு போதிய தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனிடையே, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திமுக எம்.பிக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை 2-வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

அமைத்திக்கு குந்தகம் விளைவிக்கும் ஆளுநர்: துறைமுருகன்: "நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயற்சிக்காமல் தமிழக அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல் சட்டப் பதவியில் இருப்பவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் போல் பேசி, தமிழகத்தின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அரசு உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தை வாபஸ்: "மூன்று மாத காலத்துக்குள் எங்களுடைய ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தால், சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்" என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி” - இபிஎஸ்: “அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கட்சி. எனவே, சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவ்வாறு கூறுகின்றனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனிடையே, "மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரான் சமூக செயற்பாட்டாளர் நர்கிஸுக்கு அமைதி நோபல்!: ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் - சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்: சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பிஹார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்று மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிஹாரைத் தொடர்ந்து கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்

காங்கிரஸ், பாஜகவின் போஸ்டர் யுத்தம்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து பாஜக வெளியிட்டுள்ள போஸ்டருக்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி அதன் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி குறித்து மிகப்பெரிய பொய்யர் என்றும், ஜூம்லா பாய் விரைவில் தேர்தல் பேரணியில் அடித்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் போஸ்டர் வெளியிட்டது. இதற்கு அடுத்த நாளே, பாஜக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 7 பேர் பலி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி!: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in