Published : 06 Oct 2023 08:40 AM
Last Updated : 06 Oct 2023 08:40 AM

மும்பை | அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்

பிரதிநிதித்துவப் படம்.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள், இருவர் ஆண் ஆவர். இவர்களில் இருவர் குழந்தைகள். காயமடைந்தவர்களில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உள்ளனர். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மும்பை ஹெச்பிடி மருத்துவமனை மற்றும் கூப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து அதிகாரிகள் சொன்னது என்ன? கோரேகான் எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது. 7 தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் இன்று அதிகாலை 3.05 மணியளவில் தீ பிடித்துள்ளது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கட்டிடத்தின தரைத் தளத்தில் இருந்த கடைகளில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இருப்பினும் தரைத் தளத்தில் தீ பற்ற என்ன காரணம் என்பது உறுதி செய்யப்பட்டவில்லை.தீ மளமளவெனப் பரவி பார்க்கிங் உள்பட அனைத்துத் தளங்களுக்கும் பரவியதால் மக்கள் செய்வதறியாது சிக்கிக் கொண்டனர் என்று சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ரவீந்திர அம்புல்கேகர் கூறுகையில், "தீ விபத்து நடந்த அந்தக் கட்டிடம் கடந்த 2006 ஆம் ஆண்டு குடிசை மாற்று திட்டத்தீன் கீழ் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் தீ தடுப்பு முறைகள் நிறுவப்படவில்லை. கட்டிடத்தில் லிஃப்ட் மிகவும் பழையது. இதனால் லைஃப் டக்ட் வாயிலாக கடுமையான புகை கட்டிடத்தில் சூழ்ந்தது. மக்கள் பல்வேறு தளங்களிலும் சிக்கிக் கொண்டனர். மொட்டை மாடியில்கூட சிக்கியிருந்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜம்போ டாங்கர்கள், 3 தானியிங்கி டர்ன் டேபிள்ஸ் உள்பட பல்வேறு நவீன உபகரணங்களையும் பயன்படுத்தி காலை 6 மணியளவில் தான் தீயை அணைத்தோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x