

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு முதல்வர் அறிவித்த இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாகவும், யானைப்பசிக்கு சோளப் பொரிபோல உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு போதிய தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், இந்த இழப்பீடு போதாது என்றும், முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் வாக்குறுதியை நம்பி குறுவை சாகுபடி செய்த நிலையில் பல இடங்களில் நெற்பயிர் காய்ந்து கருகிவிட்டது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்தும் விவசாயிகள் பலர் நெற்பயிரை காப்பாற்ற முடியாமல் உள்ளனர். தமிழக அரசிடம் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு கேட்ட நிலையில் ஹெக்டேருக்கு ரூ.13,500 என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல உள்ளது. அதேபோல, பாதிக்கப்பட்ட கிராமங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் இந்த இழப்பீடு தொகையை பாரபட்சமின்றி தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாறன்: தமிழக முதல்வரின் இழப்பீடு அறிவிப்பு என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது. பல கிராமங்களில் அறுவடை முடிந்து விட்டது. எதிர்பார்த்த மகசூல் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, டெல்டா மாவட்டங்களில் உர மானியம் வாங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
காவிரி உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார்: கடந்த 3 ஆண்டுகளாக குறுவைக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள் காப்பீடு செய்திருப்பார்கள். ஆனால் தமிழக அரசு அதை செய்யவில்லை. நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியை போல, டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் சாகுபடி மேற்கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசன்: முதல்வரின் இந்த அறிவிப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: தேசிய பேரிடர் ஆணையத்தின் வரன்முறையின்படி 33 சதவீத்துக்கும் கீழ் மகசூல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற முறைஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தமிழக அரசு இந்த வரன்முறையைக் கணக்கில் கொள்ளாமல், விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.