Published : 06 Oct 2023 05:44 AM
Last Updated : 06 Oct 2023 05:44 AM

சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை: சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் 66-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கு கடந்த 4-ம் தேதி நடந்தது. இதில் தமிழக கிளையின் பிரதிநிதியாக, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள், ஊடுருவல்கள் குறித்து கடந்த 2003-ம் ஆண்டு லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டதில் இருந்து, காமன்வெல்த் நாடுகளில் அதிகார பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல நாடுகளில் இக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில், பல்வேறு சவால்கள், தடைகள் நீடிக்கின்றன.

இந்த கோட்பாடுகள் மூலம் காமன்வெல்த் நாடுகளில் ஜனநாயக வளர்ச்சி, நிர்வாகம் வழிநடத்தப்படுவதை உறுதிசெய்ய, தொடர் முயற்சிதேவை. ஒவ்வொரு உறுப்பு நாட்டிலும் குறிப்பிட்ட வளர்ச்சி, முன்னேற்றம் பரவலாக வேறுபடக்கூடும். 2023-ல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளை பொருத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழக முன்னேற்றத்துக்கான வளர்ச்சி பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அவரது ஆட்சிக்காலத்தில்,சட்டப்பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x