Published : 07 Dec 2017 10:32 AM
Last Updated : 07 Dec 2017 10:32 AM

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ஊட்டி ஃபிலிம் சொசைட்டி இணைந்து வழங்கும் ஊட்டி திரைப்பட விழா நாளை தொடக்கம்: திரைப்பட இயக்குநர்கள் குவிகின்றனர்

குறும்பட இயக்குநர்களும் திரைப் பட ஆர்வலர்களும் எதிர்பார்த்துவந்த ஊட்டி திரைப்படவிழா நாளை தொடங்குகிறது.

3 நாள் நடைபெறும் இத்திரைப்படவிழாவுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசண்ட் திவ்யா தலைமை ஏற்கிறார்.

இலங்கையின் முக்கிய திரைப்படப் படைப்பாளி, இயக்குநர் பிரசன்ன விதானகே, ‘அறம்’ திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, 150 ஆண்டு பழமையான ஊட்டி ‘அசெம்பிளி ரூம்ஸ்’ திரையரங்கில் களைகட்டவுள்ளது இந்த திரைப் பட விழா.

குறும்பட வெளியீடு

தெற்காசிய அளவில் எட்டு நாடுகளைச் சேர்ந்த குறும்படங்களுடன் சிறப்புத்திரை யிடலாக பிரசன்ன விதானகேயின் படைப்பாக்கத்தில் உருவாகி உலகப் பட விழாக்களில் கவனம்பெற்ற ‘ஆகஸ்ட் மாத சூரியன்’ திரைப்படம் சப்-டைட்டிலுடன் திரையிடப்பட உள்ளது. போட்டிக்கு வந்து குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டகுறும்படங்களில் இருந்து திரையிடத் தகுதியான 127 குறும்படங்களைத் தேர்வு செய்து, அதில் இருந்து நினைவுப் பரிசுகளுடன்கூடிய ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான விருது களுக்குத் தகுதிபெறும் குறும்படங்களை இயக்குநர்கள் மிஷ்கின், சொர்ணவேல் ஆகியோர் தேர்வு செய்கின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

தொடர்ச்சியான திரையிடல்களுக்கு நடுவே, குறும்பட ஊடகம், மாற்று முயற்சிகள் குறித்த அனுபவ உரையாடல்கள் நிறைந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா, அஜயன் பாலா, ஷாஜி, லஷ்மி சரவணகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக எடிட்டர் மற்றும் இயக்குநர் பி.லெனின், இயக்குநர்கள் லிங்குசாமி, சசி, எஸ்.பி.ஜனநாதன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், லீணா மணிமேகலை, ராஜு முருகன், கேபிள் சங்கர், ஸ்ரீ கணேஷ், ஒளிப்பதிவாளர் ‘வைடு ஆங்கிள்’ ரவி சங்கர் என பலரும் கலந்துகொள்கின்றனர். கேரளாவில் இருந்து பினு பாஸ்கர், ஸ்ரீ காந்த் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

திரைப்பட ஆர்வலர்கள்

மலைகளின் அரசியான ஊட்டி நகரைத் ‘திரைப்பட விழாக்களுக்கான தலைநகராக மாற்றுவோம்’ என்ற நோக்கத்துடன் இவ்விழாவை ஒருங்கிணைத்துள்ளது ஊட்டி பிலிம் சொசைட்டி. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அதிகாரபூர்வ ஊடகப் பங்காளியாக திரைப்படவிழாவில் இணைந்து பணியாற்றிவருகிறது.

3 நாட்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ஒருவருக்கு ரூ.500 நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்கள் www.ootyfilmfestval.org என்ற இணையதளத்திலும், 96001 56650 என்ற தொடர்பு எண்ணில் அழைத்தும் பதிவு செய்துகொள்ளலாம்.

ooty film festival – என்ற முகநூல் பக்கத்தில் விழாவில் அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x