Published : 04 Oct 2023 05:19 AM
Last Updated : 04 Oct 2023 05:19 AM

ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்: 250 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்

சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே, காலாண்டு விடுப்பு முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 1 முதல் 5-ம்வகுப்புக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நேற்று முதல் தொடங்கியது. வரும் அக். 6-ம் தேதி வரை நடைபெற உள்ள பயிற்சியை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளனர். நேற்றைய பயிற்சியில் 12,402 பேர் பங்கேற்கவில்லை.

முன்னதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விசிக தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம் உட்பட நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

டிபிஐ வளாகத்தின் மற்றொரு பகுதியில் பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கலைந்து செல்லுமாறு கூறி காவல் துறையினர் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். வளாகத்தில் ஆசிரியர்கள் அமைத்திருந்த சாமியானா பந்தல்களை போலீஸார் அகற்றினர். கூடுதல்போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். இதனால், பரபரப்பான சூழல் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x