Published : 21 Dec 2017 07:30 PM
Last Updated : 21 Dec 2017 07:30 PM

ஜெ. வீடியோ விவகாரம்; வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: தினகரன்

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் விரிவாக விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக இன்று தண்டையார் பேட்டையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டி:

இந்த தேர்தல் மாபெரும் வெற்றியை எங்களுக்கு கொடுக்கப் போகிறது.  எனக்காக பணியாற்றிய கட்சியினருக்கும், 56 மாவட்டங்களில் வந்திருக்கின்ற மாவட்டச்செயலாளர்கள், 56 மாவட்ட கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி. ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க சசிகலா தலைமைதான் சரியானது என்று இந்தத் தேர்தல் முடிவு நிரூபிக்கும்.

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் வேட்பாளராக இருந்த காரணத்தால் நான் வாக்குப்பதிவு முடியும் வரை பதிலளிக்கவில்லை, ஆனால் இதற்கு முன்னர் பல தொலைக்காட்சி விவாதங்களில் இந்த வீடியோ பற்றி கேட்டபோது தேவைப்பட்டால் ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பேன் என்றேன். அந்த வீடியோ நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது, அது ஒரு பிரைவேட் வீடியோ.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழியை சசிகலா தலையில் போட்டு அவர்கள் பெயரை கெடுக்கும் விதமாக ஜெயலலிதாவை சசிகலா கொன்று விட்டார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அப்போது அமைச்சர்கள் மற்றும் இப்போதைய ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் உட்பட பலரும் இதுபோன்று பொய்பிரச்சாரம் செய்கிறார்களே, அந்த வீடியோவை வெளியிடுங்கள் என்று சசிகலாவிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனாலும் வீடியோவை வெளியிட சசிகலா மறுத்துவிட்டார்.

பின்னர் தீர்ப்புக்குப் பின்னர் பெங்களூர் செல்ல வேண்டிய நேரத்தில், நான் தான் வேண்டும், நம் கையில் இருக்கட்டும் என்று வீடியோ காட்சிகளை தேவைப்படும் என்று வாங்கி வைத்துக்கொண்டேன்.

பலரும் என்னிடம் இருந்த வீடியோவை பலமுறை வெளியிட கேட்டுக்கொண்ட போதும் நான் வெளியிடவில்லை. அந்த வீடியோவை கைப்பற்ற ஐடி ரெய்டு என்பதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்வது. நான் என் செல்போனிலேயே அதை வைத்திருந்தேன்.

பிப்ரவரி மாத கடைசியில் என்னிடம் வந்த வீடியோவை மார்ச் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கேட்டபோதும் நான் வெளியிடவில்லை. காரணம் பொதுச்செயலாளர் விரும்பவில்லை.

அதன் பிறகு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. செப்டம்பர் மாதம் அது நடைமுறைக்கு வந்தபோது விசாரணைக்கு தேவைப்பட்டால் கொடுப்பேன் வெளியில் விடக்கூடாது என்று தெரிவிப்பேன் என்றேன். காரணம் அதை வெளியிட நான் விரும்பவில்லை. நினைத்திருந்தால் ஆர்.கே.நகர் தேர்தலின் போதே அதை வெளியிட்டிருப்பேன்.

நேற்றே வெற்றிவேல் பேட்டியில் தெளிவாகச் சொல்லிவிட்டார். அந்த வீடியோ வெளியிடுவது பற்றி எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா மறைந்தபோது வெற்றிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெற்றிவேல் மீது தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு தனி அபிமானம் உண்டு.

அவருக்கும் சசிகலா, ஜெயலலிதா மீது தனி அபிமானம் உண்டு. ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் இல்லாததால் அந்த வீடியோ என்னிடமிருப்பதை அறிந்து பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அவர் என்னிடம் வீடியோவை கேட்டு வாங்கினார். அவரால் சசிகலாவைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் நேற்று முன் தினம் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான சசிகலா என்று நோட்டீஸ் விநியோகிப்பட்டிருந்த விவகாரத்தில் மனம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை அவர் திடீரென வீடியோ வெளியிட்டதாக எனக்கு தகவல் வெளியானதும் தொலைக்காட்சியில் அதைப் பார்த்தேன்.

அதன் பிறகு அவரைக் கூப்பிட்டு ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன். உங்களை நான் தூண்டிவிட்டது போல் சொல்வார்களே என்று கேட்டேன். இதைச் செய்வதாக இருந்தால் தேர்தல் பிரச்சாரத்தின் போது நானே வெளியிட்டிருப்பேன் என்று சொன்னேன். நீங்கள் வெளியிட வேண்டும் என்றால் ஆணையத்தில் நேரடியாக அளித்திருக்கலாமே என்று கேட்டேன்.

கிருஷ்ணப்ரியா எதிர்க்கிறார் என்று கேட்காதீர்கள், பொதுச்செயலாளர் எங்களுக்கு உறவினர். ஆனால் வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் பதவியே போனாலும் பரவாயில்லை என்று கட்சியின் பக்கம் நிற்கிறார்களே அதை சாதாரணமாக பார்க்க முடியுமா? அவர் மன்னிப்பு கேட்கிறார். அவர் பொதுச்செயலாளரிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லும் போது அவர் கட்சிக்காக பாடுபட்டு வருபவர். வெற்றிவேலின் செயலில் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா?

அவர் சசிகலா மீது பரப்பப்பட்ட களங்கத்தை துடைக்க விரும்புகிறேன் என்று சொல்லும் போது அவரை நீங்கள் தவறாக சொல்ல முடியுமா? இப்போதுதான் எனக்கு மனது நிம்மதியாக இருக்கிறது. எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று கூறினார்.

மனது பொறுக்க முடியவில்லை கண்டபடி சசிகலா பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் மூன்று குழல் துப்பாக்கி என்று விமர்சனம் செய்கிறார். எனக்கு மன உளைச்சலாக உள்ளது, ஸ்டாலின் மூன்று குழல் துப்பாக்கி என்று பேசுகிறார். சசிகலா பதில் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறார். இதையெல்லாம் துடைக்கும் விதத்தில் வீடியோவை வெளியிட்டேன் என்று சொன்னார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் மூன்று குழல் துப்பாக்கி என்று பேசினார். நேற்று வீடியோ வெளியிட்டதை கீழ்த்தரமான செயல் என்கிறார். பின்னர் அவரே தினகரன் ஏன் வீடியோவை வெளியிடத் தயங்குகிறார் என்று கேட்கிறார். இவர் யார், என்ன செய்தார், 40 ஆண்டு அரசியலில் இருந்தவர் என்கிறார், துணை முதல்வராக இருந்தவர் என்கிறார். அவர் கேட்கிறார் தினகரன் இந்த வீடியோவை ஏன் விட தயங்குகிறார் என்று கேட்கிறார். நாங்கள் தான் வெளியிட மாட்டோம் என்கிற முடிவில் இருக்கிறோமே அப்புறம் எப்படி வெளியிடுவோம்.

விசாரணை ஆணையம் தனி அமைப்பு. ஆனால் அதன் செயலாளர் போய் அதை மார்பிங் என்று போலீஸில் புகார் கொடுக்கிறார். அவர்கள் சம்மன் கொடுத்து வெற்றிவேலை வரச்சொல்லி வீடியோவை கொடுக்கச்சொல்லி அது மார்பிங் என்று தெரிந்தால் வழக்கு போடலாம். தானாகவே அவர்கள் இப்படி புகார் அளிக்கலாமா?

கனிமொழி, ராசா விடுதலை பற்றி நான் வாழ்த்து சொன்னது மனிதாபிமானத்தில் அதை போய் அர்த்தம் கண்டுபிடித்தால் நான் என்ன செய்ய முடியும். தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என்று சொன்னால் கூட்டணி என்று சொல்வதா? அது மாதிரி அரசியல் எனக்குத் தெரியாது. அது நாங்கள் போட்ட வழக்கும் அல்ல அது டெல்லியில் போட்ட வழக்கு.

இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x