Published : 29 Dec 2017 08:46 PM
Last Updated : 29 Dec 2017 08:46 PM

அதிமுக அரசு ஜனநாயக களங்கம்: திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானம்

பெரும்பான்மையை இழந்து விட்டுள்ள அதிமுக அரசு இனியும் தொடர்வது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், மாநில நலனுக்கு விரோதமானதும் ஆகும் என திமுக உயர் நிலை செயல் திட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்றாத திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“2ஜி எனும் மாயாவி காற்றில் கரைந்த கற்பனை கணக்கு

சில ஆதிக்க சக்திகள் அ.ராசாவின் சாதனைகளை அப்படியே திரைபோட்டு மறைத்து, 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று கற்பனைக் கணக்கு ஒன்றை உருவாக்கி, வழக்கைத் தொடுத்தார்கள்.

சிறைவாசம் இருந்தாலும் சிறிதும் கலங்காமல் தங்கள் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக நீதிமன்றத்தில் முன்வைத்து விடுதலை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கட்சி மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நீதிமன்றங்களின் மீதும், நீதித்துறையின் மாண்பு மற்றும் சுதந்திரத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் இந்த தீர்ப்பு மேலும் உரமூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

பணமழைக்கிடையேயும் தேர்தல் ஜனநாயகத்தைப் போற்றிய திமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், “பணநாயகப் படையை” எதிர்த்து திமுகவின் “ஜனநாயகப் பாதுகாப்புப் படை” போராட வேண்டும் என்றும், தேர்தல் கூட்டணி, வாக்காளர் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் போன்றவற்றை முன்வைத்து, ஜனநாயக மரபு வழிநின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த உறுதியான நிலைப்பாட்டை இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வரவேற்று, முழு மனதுடன் பாராட்டுகிறது.

வாக்காளர்களுக்குப் “பத்தாயிரம் ரூபாய்” என்றும், “ஆறாயிரம் ரூபாய்” என்றும் மக்களிடம் பணம் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருந்த நிலையிலும், தேர்தல் ஜனநாயகம் ஆரோக்கியமாகவும், ஆக்கபூர்வமாகவும் நிலைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கழகம் களத்தில் போராடியது. தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த முறையீடுகள் முழுவதும் செயலிழக்க வைக்கப்பட்ட சூழ்நிலையிலும், திமுக மனம் தளராமல் ஜனநாயகரீதியில் தேர்தலைச் சந்தித்தது.

டிச.24 அன்று வெளிவந்த தேர்தல் முடிவு கழகத்தின் ஜனநாயக போராட்டத்தில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நேர்மையான, சுதந்திரமான திமுக ஆற்றிய பணியை நடுநிலையாளர்களும், இளைஞர்களும் மனப்பூர்வமாக வரவேற்பதை இந்தக்குழு உணருகிறது.

கழகத்திற்கு ஆர்.கே.நகரில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு முற்றிலும் தற்காலிகமானது என்பதோடு, இது அடுத்துக் கழகத்திற்குக் கிடைக்கப் போகும் தேர்தல் வெற்றிக்கான படிக்கட்டாகவே இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கருதுகிறது. எந்தப் பெயரில் வலம் வந்தாலும் இரு ஊழல் அணிகளுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை.

ஒன்றுசேர்ந்து இருந்தவர்கள் வேறு வேறு திசைகளில் எதிரும் புதிருமாக நின்றாலும், தமிழகத்தில் மக்களுக்காக உழைத்திடும் நல்லாட்சி அமைவதற்கு ஒரே மாற்று திமுகதான் என்ற கள நிலவர உண்மை மக்கள் உள்ளத்தில் உறைந்து கொண்டிருப்பதை இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உணரும் அதேநேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து தேர்தல் ஜனநாயக படுகொலை செய்த வேட்பாளர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

புயல் நிவாரணத்திற்குரூ.13,520 கோடி நிதியை உடனடியாக வழங்குக!

29 நாட்கள் கழித்து, சேதப்பகுதிகளை பார்வையிட்டுள்ள மத்திய குழு, நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரியிருக்கும் 13,520 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தைத் “தேசிய பேரிடர்” மாவட்டமாக அறிவித்து, சிதிலமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைத்திடும் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய முழுமையான நிவாரணம் கிடைக்க வேண்டும்.

காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை ஒளிவு-மறைவின்றி வெளியிடவும், மத்திய - மாநில அரசுகள் இதுவரை ஏனோதானோவென்று காலம் கடத்தி வந்ததைப் போல் இனியும் காலதாமதம் செய்யாமல், போர்க்கால அடிப்படையில் வேகமான, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: பெரும்பான்மையை இழந்து, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான அ.தி.மு.க அரசு -ஜனநாயத்தின் களங்கம்

தமிழக சட்டமன்றத்தில் குறைந்தபட்சம் பெரும்பான்மையாக 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவினையாவது பெற்றிருக்க வேண்டிய அதிமுக அரசுக்கு, 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையமே தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பெரும்பான்மையை இழந்து விட்டுள்ள அதிமுக அரசு இனியும் தொடர்வது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், மாநில நலனுக்கு விரோதமானதும் ஆகும்.

அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் நிர்வாகப் பொலிவிழந்து, ஒட்டுமொத்த மாநில ஆட்சியே உளுத்துப்போய் உருக்குலைந்து விட்டது. மாநில முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை, மீன்பிடித் தொழில், நெசவுத்தொழில் என எல்லாமே முடங்கி, வேலை இல்லாத் திண்டாட்டம், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, எங்கும் எதிலும் ஊழல் என கொள்ளைப் பேய் தலைவிரித்தாடுகிறது.

தத்தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து, சட்டமன்ற பெரும்பான்மையை இழந்து, தமிழகத்தின் தன்மானத்தையும், தனிச்சிறப்பையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்தையும், பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் கேலிக்கூத்தாக்கிடும் தீமையாகும்.

ஆகவே, தமிழகத்தில் நடக்கும் இந்த கேலிக்கூத்தை, இந்தியாவில் உள்ள அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருப்பது நாம் கட்டிக்காத்து வரும் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றில் என்றும் மாறாத வடுவை ஏற்படுத்தி விடும் என்று இந்த உயர்நிலைச் செயல் திட்டக்குழு, மிகுந்த மனச்சுமையோடு சுட்டிக்காட்டிட விரும்புகிறது.”

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x