Published : 25 Dec 2017 08:41 AM
Last Updated : 25 Dec 2017 08:41 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில்டிடிவி தினகரன் அமோக வெற்றி: அதிமுகவுக்கு 2-வது இடம்; டெபாசிட் இழந்தது திமுக; நோட்டாவைவிட குறைந்த வாக்குகளை பெற்றது பாஜக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று இந்த வெற்றியை ஈட்டினார்.

ஆளும் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் என்.மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக அறிவிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்னதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இ.மதுசூதனன் (அதிமுக), என்.மருது கணேஷ் (திமுக), டிடிவி தினகரன், கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாஜக) உட்பட 59 பேர் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. இந்த முறை அவருக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தீவிர பிரச்சாரம்

அதிமுகவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். அதுபோல திமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக - தினகரன் ஆதரவாளர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். பல இடங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பணப் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்தன. இதனால் மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற பரபரப்பு எழுந்தது.

இதற்கிடையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி இதை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த நிலையில், எந்த பிரச்சினையும் இல்லாமல், முழு அமைதியுடன் கடந்த 21-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினரை உள்ளடக்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. 24 மணி நேர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அறிவித்தபடி, கல்லூரியில் உள்ள பவளவிழா அரங்கில் நேற்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 1 லட்சத்து 76,885 வாக்குகள் பதிவானதால், 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பதிவான ஒரு வாக்கு திமுகவுக்கு கிடைத்தது.

அதிக வாக்கு வித்தியாசம்

முதல் சுற்று முடிவில் தினகரன் முன்னிலை வகித்தார். அப்போது மதுசூதனன் - தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால், வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் தடைபட்டது. மொத்தம் 19 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னிலை வகித்தார்.

கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதிவான வாக்குகளில் ஜெயலலிதாவுக்கு 55.87 சதவீத வாக்குகள் கிடைத்தன.

அதேநேரம் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவைவிட தினகரன் குறைவான சதவீத வாக்குகள் பெற்றிருந்தாலும், வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவைவிட அதிகம் பெற்றுள்ளார். அதாவது 50.32 சதவீதம் பெற்று 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டெபாசிட் இழந்த திமுக

கடந்த 2016 தேர்தலில் 57,673 அதாவது 33.14 சதவீத வாக்குகள் பெற்ற திமுக, இந்த இடைத்தேர்தலில் 24,651 அதாவது 13.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது.

நோட்டாவுக்கு வாக்கு

திமுகவுக்கு அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி 3,860 வாக்குகளுடன் 4-வது இடத்தைப் பெற்றது. நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக அதையும்விட குறைவாக 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மற்ற 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

தினகரன் என்ற பெயரில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் மூவரும் சேர்ந்து 298 வாக்குகள் மட்டுமே பெற்றனர். அதுபோல மதுசூதனன் பெயரில் போட்டியிட்ட 2 பேர் 196 வாக்குகளைப் பெற்றனர்.

தேர்தல் முடிவுகள்:

மொத்த வாக்குகள் - 2,28,234

பதிவான வாக்குகள் - 1,76,890

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89,013,

இ.மதுசூதனன் (அதிமுக) - 48,306

என்.மருதுகணேஷ் (திமுக) - 24,651

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,860

நோட்டா - 2,373

பாஜக - 1,417

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x