Published : 01 Oct 2023 06:27 PM
Last Updated : 01 Oct 2023 06:27 PM

குன்னூர் பேருந்து விபத்து | நிவாரணத்தொகையை நேரில் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா பேருந்தில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் உதகையில் இருந்து குன்னூர் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர். பேருந்து மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பேருந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

பேருந்தை நிறுத்திய மரம்: 30 அடியில் இருந்த ஒரு மரம் பேருந்து 150 அடி பள்ளத்தில் உருண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் பலர் உயிர் தப்பினர். மீட்புப்பணி; பேருந்துக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். சாலையில் இருந்து கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர் பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

9 பேர் பலி: அங்கு சிகிச்சை பலனின்றி பேபிகலா(42) மூப்பிடாதி(67), கௌசல்யா(29), தங்கம்(50), ஜெயா (40), நித்தின் கண்ணா(15), முருகேசன்(65), இளங்கோ(64) ஆகியோர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பேருந்து அடியில் சிக்கியிருந்த மூதாட்டி பத்மராணி(58) சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள 53 பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களில் கவுதமி(57), சண்முகதாய்(48) ஆகியோர் உதகை மருத்துவமனையிலும், முப்பிடாதி(65), செல்லம்மா(70) ஆகியோர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் படுகாயங்களுடன் குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிறர் சிறு காயங்களுடன் தப்பினர்.

அஞ்சலி, ஆறுதல்: இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் இன்று குன்னூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கினர்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது: "தென்காசி மாவட்டத்திலிருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்கள், கொச்சி, குருவாயூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று விட்டு 30-ம் தேதி அன்று குன்னூர் பகுதியிலுள்ள சுற்றுலாதளங்களை சுற்றி பார்த்துவிட்டு மாலை தென்காசிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, மரப்பாலம் அருகே எதிர்பாராத விதமாக 60 பயணிகளுடன் பயணத்த அவ்வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 நபர்கள் இயற்கை எய்தியுள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இப்பேருந்தில் பயணம் செய்து விபத்தில் சிக்கிய 32 நபர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிறு காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய 2 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 நபர்கள் உதகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. 15 நபர்கள் மிகச்சிறிய காயங்களுடன் அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் மருத்துவ உதவிகள் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் முழுவீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் 32 நபர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகள் விரைவில் மருத்துவர்களின் ஆலோசனைகள் பெற்று மேற்கொள்ளப்படும்.

இந்த விபத்தில் இறந்த 9 நபர்களின் உடல்களும் அவர்களது உறவினர்களுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். விபத்து நடந்தவுடனேயே மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டனர். அரசு மற்றும் தனியார் 108 வாகனத்தின் சேவையும் பாராட்டுக்குரியதாக இருந்ததது. மேலும் குன்னூர் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும், பொதுமக்களும் மீட்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்ட காரணத்தினால் மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.'' இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஓட்டுநர்கள் தவறால் நிகழ்ந்த விபத்து?: குன்னூர் மலைப்பாதையில் ஓட்டுநர்கள் தவறால் விபத்து நிகழ்ந்திருக்கும் என தெரிகிறது. தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 60 பேர் தனியார் பேருந்து மூலம் சுற்றுலா வந்துள்ளனர். கேரள மற்றும் நீலகிரி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த கீழ் கடையத்தை சேர்ந்த அன்பழகன் செய்துள்ளார். இவரும், தன்னுடைய மனைவி பத்மா ராணியுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். உதகை முதல் குன்னூர் வரை மற்றொரு ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் குன்னூரிலிருந்து பேருந்தை ஓட்டுநர் முத்துக்குட்டி(65) ஓட்டி வந்துள்ளார். அப்போது, குன்னூரை தாண்டி சில தூரத்திலேயே வாகனத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சப்தம் வந்ததை பேருந்தில் உள்ளவர்கள் கேட்டுள்ளனர். அவர்கள் இது குறித்து ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். இரு ஓட்டுநர்களும் பேசிக் கொண்டே இருந்ததால், பயணிகள் கூறியது ஓட்டுநரின் காதில் விழவில்லை. அதற்குள் வாகனம் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த அன்பழகனின் மனைவி பத்மராணியும் பரிதாபமாக உயிரிழ்ந்தார். இதே போல பேருந்தில் பயணித்த கீழ்கடையத்தைச் சேர்ந்த இளங்கோ(64), கவுசல்யா(29) ஆகிய தந்தை, மகள் இருவரும் விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து ஓட்டுநர்கள் தவறால் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. எனினும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் காரணம் தெரிய வரும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நீலகிரியில் பேருந்து விபத்துக்கள்: நீலகிரி மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்துகளில், கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் கல்லட்டி மலைப்பாதையில் அரசுப் பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில், ஓட்டுநர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் பத்தாண்டுகளுக்கு பின்னர் 2018-ம் ஆண்டு உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மந்தாடா பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்தாண்டு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x